horticulture department should continue as a separate department - Annamalai emphasizes! Google
தமிழ்நாடு

தோட்டக்கலை துறை தனித்துறையாக தொடர வேண்டும்- அண்ணாமலை வலியுறுத்தல்!

Annamalai on Horticulture Department : உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0 அரசாணையை முழுமையாக ரத்துசெய்ய வேண்டுமென அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Baala Murugan

அண்ணாமலை எக்ஸ் பதிவு

Annamalai on Horticulture Department : சென்னை, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “திமுக அரசு வெளியிட்டுள்ள உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0 (UATT 2.0) தொடர்பான அரசாணைகள் எண் 252 மற்றும் 288, “கள அலுவலர் ஒருங்கிணைப்பு” என்ற பெயரில், தோட்டக்கலைத் துறையின் தனித்துவம், நிபுணத்துவம் மற்றும் செயல்திறனை குலைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, இன்று தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு அலுவலருக்கு பல துறை திட்டங்கள்

தோட்டக்கலை சாகுபடி பரப்பு 13.5% மட்டுமே என்றாலும், உற்பத்தி மதிப்பில் 30.5% மற்றும் தமிழக வேளாண் ஏற்றுமதியில் 58–60% பங்கு. இத்தகைய உயர் மதிப்புத் துறைக்கு தனி நிர்வாகமும் துறைசார் நிபுணத்துவமும் அவசியம். ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் விற்பனை துறைகள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரே அலுவலருக்கு பல துறைத் திட்டங்களை ஒப்படைப்பது, நிர்வாக குழப்பத்தையும் செயல்திறன் குறைவையும் உருவாக்கும்.

தோட்டக்கலைத் துறை தனித்துவம் குறைந்தால் முதலீடு நீண்டகாலத்தில் பாதிக்கப்படும்

தற்போது தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையில், தொழில்நுட்ப அலுவலர்கள் பலருக்கு முன் அறிவிப்பு இன்றி, தொலைதூர மாவட்டங்களுக்கு அவசர பணியிட மாற்ற ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் கடுமையான பொருளாதார சுமை மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, அவர்களது குழந்தைகளின் கல்வித் தொடர்ச்சியும், எதிர்காலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சுமார் 1,000 தோட்டக்கலை பட்டதாரிகள் உருவாகின்றனர். இந்தத் துறையின் தனித்துவம் குலைந்தால், வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, திறன் முதலீடு ஆகியவை நீண்டகாலத்தில் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தோட்டக்கலை தனித்துறையாக தொடர வேண்டும்

எனவே, விவசாயிகள் நலன், உணவு பாதுகாப்பு, ஏற்றுமதி திறன், துறை அலுவலர்களின் குடும்ப நலன் மற்றும் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, UATT 2.0 – அரசாணைகள் எண் 252 & 288 உடனடியாக முழுமையாக ரத்து செய்வதோடு, தோட்டக்கலை அலுவலர்களுக்கான அவசர இடமாற்ற ஆணைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், தோட்டக்கலைத் துறை அதன் தனித்துவம் மற்றும் துறைசார் நிபுணத்துவத்துடன் தனித்துறையாக தொடர வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.