HRCE Assistant Commissioner Indira Arrest in Coimbatore 
தமிழ்நாடு

ரூ.1.5 லட்சம் லஞ்சம்: கைதான இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரி

HRCE Asst Commissioner Indira Arrest in Coimbatore : தனியார் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைப்பதற்கு, லஞ்சம் பெற்ற அதிகாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

MTM

HRCE Assistant Commissioner Indira Arrest in Coimbatore : கோவை மாவட்டம், சூலூர் அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் தனியார் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலுக்கு ரூ.40 லட்சம் ஆண்டு வருமானமாக வந்தபோதும், முறையான நிர்வாகம் இல்லை என்பதால், கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின்(HR&CE) கீழ் இணைக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகி சுரேஷ்குமார் என்பவர் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இதனிடையே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவின் மீதான விசாரணையில், 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவிடம் சுரேஷ்குமார் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு ரூ.3 லட்சம் பணம் லஞ்சமாக வேண்டும் என இந்திரா(Indira) கூறியதாகவும், தொடர் பேச்சுவார்த்தையில் ரூ.1.5 லட்சமாவது வேண்டும் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க : திமுக கூட்டணியில் இருந்து வெளியேற தயாரா? : காங்கிரசுக்கு சவால்

லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ், லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தல்படி, சுரேஷ் நேற்று இரவு இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் இந்திராவிடம் ரூ.1.5 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்திராவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.