அறிவிக்கப்படாத மின்வெட்டு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்குப் பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இரவில் மின்தடை அதிகரித்துள்ளது.
தவெக அரசுக்கு கேள்வி?
ஃப்யூஸ் கேரியர் திருடு போனதாக பல்வேறு சாக்கு போக்குகளை கூறினார்கள். ஃபியூஸ் கேரியரை பிடுங்கிச் சென்றால் தமிழ்நாடு முழுவதும் எப்படி மின்வெட்டு ஏற்படும்?.
முன்னர் அணில் ஓடியதால் மின்தடை ஏற்பட்டதாக திமுக சொன்னது. தற்போது இவர்கள் இதைச் சொல்கிறார்கள். தேவையான மின்சாரத்தை கொள்முதல் செய்து, தடையற்ற மின்சாரத்தை வழங்க வேண்டும்.
ஆளுநர் உரையில் புதிதாக எதுவும் இல்லை
ஆளுநர் உரையில் புதிதாக எந்தத் திட்டங்களும் இடம் பெற வில்லை. அரசு சார்பில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் என்ன கூறப்பட்டிருந்ததோ, அதே தான் ஆளுநர் உரையிலும் கூறப்பட்டிருக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பெண்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என வீர வசனம் பேசினார்கள். தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
போதைப் பொருள் விற்பனை முன்பைவிட அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை.
38 நாட்கள், 150 போக்சோ வழக்குகள்
தவெக ஆட்சி அமைந்த பிறகு 38 நாட்களில், 150 போக்சோ வழக்குகளும் , பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 126 வழக்குகள் என மொத்தம் 276 வழக்குகள் பதிவாகி உள்ளது.130 கொலைகளும் நடந்துள்ளன. இன்றைய ஆளுநர் உரை என்பது ‘கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்’.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே
எனது மகன் மிதுன் அரசியலுக்கு வருவது குறித்து தொலைக்காட்சிகளில் பல்வேறு விவாதங்கள் வருகிறது. அது தவறு. அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக மட்டும்தான் உள்ளார்.
எனது மகன் அரசியலுக்கு வரமாட்டார்
கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகிறேன்.எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறேன். அவதூறு செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
விஜயபாஸ்கருக்கு பதிலடி
அதிமுக தலைமை சரியாக இருந்ததால்தான் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார் என்பதை மறந்துவிடக் கூடாது. அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைத்துகூட பார்க்க கூடாது. வெற்றி, தோல்வியை மாறி மாறிதான் பெற்று வருகிறோம்.
என்னை விமர்சித்தவர்கள், தோற்றார்கள்; நான் அவர்களை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் ” என்று எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.
=======================