தமிழகத்தில் கனமழை :
IMD Weather Update in Tamil Nadu Rain : வங்கக் கடலில் உருவான டிட்வா புயல், வட தமிழக கரையை நோக்கி நகர்ந்து வந்த போது, வேகம் குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. சென்னைக்கு அருகே நிலை கொண்ட தாழ்வு மண்டலம், 2 நாட்களாக அதே இடத்தில் நீடித்ததால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இரவு நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.
வலுவிழக்கும் தாழ்வுப்பகுதி
தாழ்வு மண்டலம் தாழ்வுப்பகுதியாக மாறி, படிப்படியாக வலுவிழந்து அரபிக் கடலை நோக்கி செல்லும். இதனால், தமிழகத்தில் மழை குறையும்.
இதுபற்றி தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில், “ சென்னை நகரின் ஒரு பகுதியை நோக்கி கடுமையான மேகங்கள் நகர்கின்றன.
இரவு வரை சென்னையில் மழை
இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் (KTCC) கனமழை பெய்தாலும் ஆச்சரியமில்லை. காற்றழுத்த தாழ்வு பகுதியால் கனமழை பெய்வது KTCC மாவட்டங்களுக்கு இன்று கடைசி நாளாக இருக்கும். இன்றிரவு வரை மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது.
எண்ணூரில் 50 செ.மீ. மழை
காற்றழுத்தத் தாழ்வு நிலையின் ஈரப்பதம் மாநிலம் முழுவதும் பரவுவதால், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும். டிட்வாவின் தாக்கத்தால் சென்னையை அடுத்த எண்ணூரில் இதுவரை 500 மி.மீ., மழை பெய்திருக்கிறது என்றும் இன்னும் ஒரு நாள் மழை பெய்யும்” என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
17 மாவட்டங்களில் மழை
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
6 இடங்களில் கனமழை
கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் மிக கனமழையும், 46 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை எண்ணூர், செங்கல்பட்டில் தலா 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை சேத்துப்பட்டு 13 செ.மீ., திருமயம், சென்னை விம்கோநகர், தாமரைப் பாக்கத்தில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
=====