கரை கடந்த ‘சென்யார்’ புயல்
Ditwah Cyclone Update in Tamil : வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான ‘சென்யார்’ புயல், இந்தோனேஷியாவில் நேற்று கரையை கடந்தது. இதனால், கனமழை கொட்டித் தீர்த்தது. இந்தோனேஷியாவை நோக்கி நகர்ந்து சென்றதால், பாதிப்பில் இருந்து தமிழகம் தப்பியது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இந்தநிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய, தென்மேற்கு வங்கக்கடல் - இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
12 மணி நேரத்தில்"‘டிட்வா-Ditwah" புயல்
தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் பயணித்து வரும் தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். இந்த புயல் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா நோக்கி நகரும். ஏமன் நாடு பரிந்துரைத்த டிட்வா என்ற பெயர் புயலுக்கு சூட்டப்படும்.
பலத்த தரைக்காற்று - எச்சரிக்கை
தாழ்வு மண்டலம் நகர்ந்து வரவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று சில இடங்களில் பலத்த தரைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்யலாம்.
கனமழை எச்சரிக்கை
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
29ம் தேதி ரெட் அலெர்ட்
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், சில இடங்களில், நாளை மறுநாள் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு
தென்மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது.
===========