வானிலை ஆய்வு மையம்
Montha Cyclone Alert : வங்கக் கடலில் இந்த வார துவக்கத்தில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மண்டலமாக வலுப்பெறாமல், வலுவிழந்து, மறைந்துவிட்டது. இதனால், நேற்று சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவு இல்லாமல், சூரிய ஒளி இருந்தது.
உருவாகும் மோந்தா புயல் :
இன்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகியிருக்கிறது. இதனால் மீண்டும் வானம் மேகமூட்டத்துடன் மாறி அவ்வப்போது சிறு தூறல்கள் பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இது அக். 26ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அக்.27ஆம் தேதி புயலாகவும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழையின் முதல் புயலாக உருவாகவிருக்கும் இந்த புயல் சின்னத்துக்கு மோந்தா என்று பெயரிட்டுள்ளனர்.
கனமழை இருக்கும்
காற்றழுத்த தாழ்வு நிலையானது, வரும் 27ஆம் தேதி காலை புயலாக வலுப்பெறும். திங்கள்கிழமை காலை தென்மேற்கு, மேற்கு மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாகவும், இது ஆந்திரா நோக்கிச் சென்றாலும் தமிழகத்தில் உள்ள வட மாவட்டங்களில் மழைப்பொழிவு கொடுக்கும் என்றும், பெரிய அளவில் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு இல்லாமல் கன மழையாக பெய்ய கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
3 நாட்களுக்கு கனமழை
காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அக். 26ஆம் தேதி ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்.27ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் மிக கனமழை பெய்யும் என்றும், அக். 28ஆம் தேதி திருவள்ளூர், ராணிபேட்டையில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : வங்கக் கடலில் தாழ்வுப்பகுதி : புயலாக மாற வாய்ப்பு? எங்கு கடக்கும்?
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை, நிலப்பரப்புக்கு வெகு தொலைவில் நடுக் கடலில் இருப்பதால், இது புயலாக மாறி கரையைக் கடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.