பொய்த்த தென்மேற்கு பருவமழை
சூப்பர் எல் நினோ பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு தென்மேற்கு போதிய அளவு பெய்யவில்லை. தேசிய அளவில் சராசரியாக 13 சதவீதம் மழை அளவு குறைந்துள்ளது. தென் மாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாவே இருக்கிறது.
மழைப்பொழிவு இன்றி தொடர்ந்து வெயில் வாட்டி வதைப்பால், வறட்சி தலைதூக்கும் அபாயம் உள்ளது. நீர்நிலைகள் வறண்டு வருகின்றன.
3வது வாரம் பருவமழை
இந்தநிலையில், அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இயல்பை விட அதிக மழை
தமிழ்நாட்டில் அக்டோபர் மாதத்திலும் இயல்பை விட அதிகமான அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையைச் சந்திக்க நேரிடலாம்.
மேலும், அக்டோபர் மூன்றாம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மாநிலம் வழக்கமாக சராசரியாக 44 செ.மீ மழையை பெறுகிறது.
கடலோர மாவட்டங்களில் இயல்பான மழை
தெற்கு மற்றும் கடலோரப் பகுதிகள் இயல்பான அல்லது இயல்பை விட அதிகமான மழையைப் பெற வாய்ப்புள்ளது. அதேநேரம், வட உள்மாவட்டங்களில் இயல்பை விடக் குறைவான மழையே பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் ஆண்டு மழையளவில் கணிசமான பங்களிப்பை வழங்கும் வடகிழக்கு பருவமழை, இந்த ஆண்டு இயல்பான அளவில் இருக்கும்.வட தமிழகத்தின் சில பகுதிகள் சராசரிக்கும் குறைவான மழையைப் பெறக்கூடும்.
மாநிலத்தின் பல பகுதிகளில் அக்டோபர் மாதத்தில் இயல்பான அல்லது இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
எல் நினோ பாதிப்பு நீடிக்கும்
தற்போது நிலவும் வலுவான எல் நினோ சூழல் ஆண்டு இறுதி வரை மேலும் வலுவடையக்கூடும். அதேவேளையில், வடகிழக்கு பருவமழைக் காலத்திலும் இந்தியப் பெருங்கடல் இருமுனை (ஐஓடி) நடுநிலை நிலையிலேயே நீடிக்கலாம்.
பொதுவாக, நேர்மறை ஐஓடி வடகிழக்கு பருவமழைக்குச் சாதகமானதாகக் கருதப்படுகிறது. தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் மாநிலம் சராசரிக்கும் குறைவான மழையைப் பதிவு செய்துள்ளது. மழையளவில் 20 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் 35 சதவீதத்திற்கும் அதிகமான பற்றாக்குறை பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
==============