India Health Ministry on Free Cervical Cancer Vaccine in India 
தமிழ்நாடு

கருவாய்ப் புற்றுநோய் இலவச தடுப்பூசி : பயிற்சியைத் தொடங்கிய அரசு

Cancer Vaccine: கருவாய்ப் புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதற்குத் தயாராகும் வகையில், மருத்துவ மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை சுகாதார அமைச்சகம் தொடங்கியுள்ளது.

MTM

Free Cervical Cancer Vaccine in India : கருவாய்ப் புற்றுநோய் தடுப்பூசி குறித்து விசிகவைச் சேர்ந்த விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் (UIP) கீழ் HPV தடுப்பூசியைச் சேர்ப்பதில் ஏற்பட்டுவரும் தாமதம் குறித்தும் ரவிக்குமார் எம்.பி அதில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கருவாய்ப் புற்றுநோய் தடுப்பூசிக்கான மருத்துவ மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) தொடங்கியுள்ளது. ஜூன் 2022 இல், நோய் சுமை, தடுப்பூசியின் ஒரு டோஸின் செயல்திறன், மருத்துவ பரிசோதனை முடிவுகள் மற்றும் பிற தொடர்புடைய தரவுகள் தொடர்பான புதிய ஆதாரங்களின் அடிப்படையில், உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தில் (UIP) கரு வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசியை அறிமுகப்படுத்த தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) பரிந்துரைத்தது என அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளாக இது குறித்து நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி குரலெழுப்பி வந்தார். தமிழ்நாடு அரசிடம் அவர் வலியுறுத்தியதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்துக்கு மட்டும் அந்தத் தடுப்பூசித் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்தினார். இப்போது இந்தியா முழுவதும் இந்தத் தடுப்பூசித் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. விசிக சார்பில் ரவிக்குமார் எம்.பி முன்னெடுத்த தொடர்ச்சியான போராட்டத்துக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது.

உலகிலேயே கருவாய்ப் புற்று நோயால்(Cervical Cancer Death in India) அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் உயிரிழப்பது இந்தியாவில் தான். ஆண்டொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பெண்கள் இந்த நோயால் உயிரிழக்கின்றனர். இந்தியாவிலுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு(Tamil Nadu) இரண்டாவது இடம் வகிக்கிறது.