நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு
modi speech மதுராந்தகத்தில் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த இந்திய பிரதமர் மோடிக்கு பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, தினகரன் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பலரும் உற்சாக வரவேற்பளித்தனர்.
நரேந்திர மோடி உரை
பாரத் மாதா கீ ஜே எனக் கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், அன்புமணி, டிடிவி தினகரன் ஆகியோரை வரவேற்று பேசினார். கூட்டணி கட்சி தலைவர்கள் பெயர்களை கூறிய பிரதமர் மோடி, இளம் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம் என்று கூறினார். பின்னர் மேலும் அவர் கூறியதாவது:- 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் எனது முதல் பயணம் இது. பொங்கலுக்கு பின் சிறப்பான ஆனந்தம் நிறைந்திருக்கிறது. பொங்கல், எம்ஜிஆர் பிறந்தநாள் உள்ளிட்ட சிறப்பான நாட்கள் உள்ள மாதத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளேன்.
மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த ராமரை வணங்குகிறேன், தமிழ்நாட்டின் நலனிற்காகவும் வேண்டிக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக மனிதர் எம்ஜிஆர். இங்கு கூடியுள்ள கூட்டம் நாட்டிற்கு ஒரு செய்தி சொல்கிறது. தமிழ்நாடு இப்போது மாற்றத்திற்கு தயாராகிவிட்டது என்பது தான். மோசமான திமுக ஆட்சியில் இருந்து தமிழ்நாடு விடுபடத்துடிக்கிறது, தமிழ்நாடு என்டிஏ கூட்டணியை விரும்புகிறது. தமிழ்நாட்டை திமுக அரசிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது தான் நம் அனைவரின் உறுதிப்பாடு. திமுக அரசின் முடிவுரைக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது உள்ளிட்ட பல்வேறு அரசியல் கருத்துக்களை முன்வைத்தார்.
மகிழ்ச்சி தெரிவித்து விடைபெற்ற நரேந்திர மோடி
இவரின் பேச்சு அதே மேடையில் கட்சி தொண்டர்களுக்கு மொழி பெயர்க்கப்பட்டது. அரை மணி நேரம் குறையாமல் உரையாற்றிய பிரதமர் மோடி, பின்னர் உரையை நிறைவு செய்தார். இதைத்தொடர்ந்து மேடையில் அமர்ந்திருந்த தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்த அவர், தொண்டர்களை நோக்கி கைஅசைத்து நன்றி கூறி அங்கு இருந்து புறப்பட்டார்.