தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கோவையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இன்று காலை கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது பொதுமக்கள் அவருக்கு கை கொடுத்ததுடன், அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,
தேர்தல் அறிக்கையின்படி 4 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாக திமுக அரசு உறுதியளித்தது. ஆனால், 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு தான் அரசு வேலை வழங்கியுள்ளனர். தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை . 2024-25 ஆம் ஆண்டு உபரி வருவாய் கிடைத்த நிலையிலும் திமுக அரசு கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்.
அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணிகளின் போது, நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திமுக ஆட்சியில் நீர்நிலைகள் தூர்வாரப்படவில்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.