interim budget has stated that the debt burden of the Tamil Nadu government will be Rs. 10.71 lakh crore by the end of the 2027 financial year google
தமிழ்நாடு

அரசின் நிதிநிலை: 10.71 லட்சம் கோடி கடன், 48,696 கோடி பற்றாக்குறை

TN Interim Budget 2026 - 27 : தமிழக அரசின் கடன் சுமை 2027ம் நிதியாண்டின் முடிவில் ரூ.10.71 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Kannan

TN Interim Budget 2026 - 27 : தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பொருளாதார நிலை

தமிழகம் பொருளாதார வளர்ச்சியுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பு 2025-26 ஆம் ஆண்டில் 14.5 சதவிகிதமாக வளர்ச்சியடையும். உண்மையான வளர்ச்சி 9% ஆகவும், சராசரி பணவீக்கம் 5.5% ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி வளர்ச்சி 14%

2027-28 மற்றும் 2028-29 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி ஆண்டுக்கு 14 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வருவாய் விவரங்கள்

மத்திய அரசின் நிதிப் பகிர்வு உட்பட, மாநில அரசின் மொத்த வருவாய் 2025-26 நிதியாண்டில் 3,09,697.92 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட நிலையில், 2026-27 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் இந்த தொகையானது 3,44,575.31 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வரிகளில் பங்கு

2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் 56,819.23 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்த மத்திய அரசின் வரிகளில் மாநில அரசுக்கான பங்கு, 2026-27 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் 62,530.65 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

செலவின விவரங்கள்

2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் வருவாய் செலவினங்கள் 3,93,271.63 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டிற்கானதை காட்டிலும் 3.79% அதிகம்.

ஊதிய செலவினங்களுக்கு மட்டுமே 94 ஆயிரத்து 377 கோடி ரூபாய்

சம்பளம் அல்லாத செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பிற்கான செலவினமாக 18 ஆயிரத்து 735 கோடி ரூபாயாக இருக்கும்.

ஓய்வூதியம் தொடர்பான செலவினங்களுக்காக 45 ஆயிரத்து 323 கோடி ரூபாயும் ஒதுக்கீடு

மானியங்கள் மற்றும் நிதி மாற்றங்களுக்காக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 108 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசின் கடனுக்கான வட்டி செலுத்துவதற்காக 78 ஆயிரத்து 677 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2026-27 நிதியாண்டிற்காக 59 ஆயிரத்து 561 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி, வருவாய் பற்றாக்குறை

2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் மாநில அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பில் நிதிப்பற்றாக்குறையின் விகிதம், 3.00% ஆக உள்ளது.

அரசின் கடன் விவரங்கள்

மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதலும் திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப்பட்டுள்ளன. 2026-27 ஆம் ஆண்டில் மாநில அரசு 1,79,809.65 கோடி ரூபாய் மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது.

கடன் 10.71 லட்சம் கோடி

அதேநேரம், 60,413.42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்த உள்ளது. இதன் விளைவாக, 31.03.2027 அன்று நிலுவையில் உள்ள கடன் 10,71,770.34 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

2026-27 ஆம் ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 26.35 சதவிகிதம் ஆக இருக்கும்”என தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

======================