திமுக கூட்டணியில் காங்கிரஸ்
தமிழக சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இந்தமுறை நீண்ட இழுபறிக்கு பிறகு தான், ஒரு ராஜ்யசபா சீட், 28 சட்டமன்ற தொகுதிகளை கேட்டுப் பெற்றது.
தவெகவை காட்டி கூடுதல் சீட்
விஜயின் தவெகவுடன் காங்கிரஸ் செல்லும் என்று கூறி தான் சீட் எண்ணிக்கையை அதிகரித்து பெற்றதாக பரவலாக பேச்சு எழுந்தது. தொகுதிகளை அடையாளம் காண்பது, வேட்பாளர்கள் தேர்விலும் பெரிய அளவில் சொதப்பியது காங்கிரஸ்.
வேட்பாளர் தேர்வில் அதிருப்தி
இரண்டு முறை வேட்பாளர் பட்டியல் தலைமைக்கு அனுப்பப்பட்டு ஒரு வழியாக வெளியிடப்பட்டது. வேட்பாளர்கள் விற்பனை நடைபெற்றதாக எம்பி ஜோதிமணியின் கருத்து, தவெகவுடன் பேசியது உண்மைதான் என்ற பிரவீன் சக்ரவர்த்தியின் ஒப்புதல் பற்றி காங்கிரஸ் தலைமை வாய் திறவாமல் உள்ளது.
ஒட்டாத கூட்டணி
கூட்டணியில் தொடர்ந்தாலும், திமுக - காங்கிரஸ் இடையே ஒருமித்த கருத்து இல்லை. செல்வப்பெருந்தகை திமுக தலைமையிடம் நெருக்கமாக இருந்தாலும், தேசிய அளவில் யாரும் இன்னும் பிரசாரத்திற்கு வரவில்லை.
தமிழகத்தை புறக்கணிக்கும் ராகுல்?
குறிப்பாக ராகுல் காந்தி, தமிழகத்தை அப்பட்டமாக புறக்கணிக்கிறார். புதுச்சேரி பிரசாரத்திற்காக சென்னை வந்த அவர், நிர்வாகிகள் யாரையும் சந்திக்கவில்லை.
தேர்தல் வியூகம் பற்றியும் இதுவரை ஆலோசனை நடத்தியதாக தெரியவில்லை. 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், திமுகவை நம்பி மட்டுமே களம் காண்கிறது.
ஆர்வம் காட்டாத காங். நிர்வாகிகள்
அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், காங்கிரஸ் பின்தங்கி இருப்பதாக வெளிப்படையாக தெரிகிறது. அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட பெரிய அளவில் பரப்புரை மேற்கொள்ளவில்லை.
பிரதமர் மோடி கூட மூன்று முறை பிரசாரத்திற்காக வந்து சென்று விட்டார். பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வரை தேர்தல் களத்தில் இறங்கி வேலை பார்க்கின்றனர்.
ஸ்டாலின் vs ராகுல் காந்தி
இதற்கு நேர்மாறாக, காங்கிரஸின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முகமாக திகழும் ராகுல்காந்தி தமிழகத்திற்கு வராதது, திமுக கூட்டணியில் தொடர்வதை விரும்பவில்லையோ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
புதுச்சேரி பிரசாரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பற்றி, ராகுல் ஒருவார்த்தை கூட பேசவில்லை. இதேபோன்று ஸ்டாலினும் ராகுல் பற்றி எதையும் குறிப்பிடாமல் தான் புதுவையில் பிரசாரம் செய்தார்.
தமிழகத்தை புறக்கணிக்கிறாரா ராகுல்?
தமிழக மதசார்பற்ற கூட்டணி தொடர்பாக இதுவரை ராகுல் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே, தமிழக பிரசாரத்துக்கு முக்கியம் கொடுக்காமல் புறக்கணிக்கிறாரா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
=====