திமுகவை நெருக்கும் கூட்டணி கட்சிகள்
தேர்தல் நெருங்கி வரவர, கூட்டணி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விஜயின் தவெக வருகைக்கு பிறகு, திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் இடம் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறது.
காங்கிரஸ் குடைச்சல்
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு, 42 தொகுதிகள் என்று டிமாண்டை ஏற்றி, திமுகவை கொந்தளிக்க வைக்கிறது. அதிகாரத்தில் பங்கு என்பது ஒத்துவராது என, திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பகிரங்கமாக கூறும் அளவு பிரச்னை முற்றி இருக்கிறது.
இரட்டை இலக்க தொகுதிகள் - கூட்டணி கட்சிகள்
இதைப்பார்த்து திமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்டு நெருக்கடி கொடுக்க துவங்கி விட்டன. விடுதலை சிறுத்தைகள், மதிமுக இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்க்கின்றன.
இவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பது போன்று, கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 15 தொகுதிகள் வரை எதிர்பார்க்கின்றன. ஒரிரு தொகுதிகளில் போட்டியிட்ட சிறிய கட்சிகளும் கூடுதலாக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று டிமாண்ட் வைக்கின்றன.
நெருக்கடி கொடுக்கும் கமல்
இப்படி ஒருபுறம் இருக்க கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தங்களது உயரம் தெரிந்து ஆறு சீட்டுக்கு ஆர்ப்பாட்டமில்லாமல் அடிபோட்டுக் கொண்டிருக்கிறது.
2021 சட்டமன்ற தேர்தலில் சமக, ஐஜேக கட்சிகளுடன் கைகோத்து களமிறங்கிய கமல்ஹாசன். 140 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியும், மேஜிக் நடக்கவில்லை. மக்கள் நீதி மய்யம் வாக்கு வங்கியும் 2.5 சதவீதமாக சரிந்தது.
கூடுதல் தொகுதிகள் - மநீம
மக்களவைத் தேர்தலில் ‘மய்யத்தை’ தங்கள் பக்கம் இழுத்த திமுக, அதற்கு பரிசாக ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க, கமல்ஹாசன் எம்பியானார். இந்தநிலையில், சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கேட்டு பெற வேண்டும் என்பதில், மக்கள் நீதி மய்யம் உறுதியாக இருக்கிறது.
கெத்து காட்டும் கமல்ஹாசன்
தான் தோற்றுப்போன அரசியல்வாதி என்று சிலர் விமர்சிப்பதை பொறுக்க முடியாமல் வேதனையடைந்து இருக்கும் கமல்ஹாசன், கட்சியை வளர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்கு தேர்தல் வெற்றி மட்டுமே வழி என்பதும் அவருக்கு நன்றாக தெரியும்.
மநீம கட்சி நிர்வாகிகள் ஆதங்கம்
மக்கள் ஆதரவு, அவர்களின் வாக்கு தேவையென்றால், போராட்டம், ஆர்ப்பாடங்களை தொடர்ந்து நடத்த வேண்டும். சொந்த சின்னத்தில் தேர்தலில் நிற்க வேண்டும். அப்போதுதான் கட்சி வளரும். இதை கமல்ஹாசன் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே, மநீம நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
6 தொகுதிகள், டார்ச்லைட் சின்னம்
அந்த வகையில் ஆறு தொகுதிகளில் போட்டியிட வேண்டும், கட்சியின் சின்னமான டார்ச் லைட்டில் சின்னத்தில் தான் களமிறங்க வேண்டும் என மநீம நிர்வாகிகள் உறுதியாக இருக்கிறார்கள்.
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக கருதப்படும் மயிலாப்பூர், வேளச்சேரி, விருகம்பாக்கம், ஆலந்தூர், கோவை தெற்கு, மதுரை மத்தி அல்லது தெற்கு தொகுதிகளை அவர்கள் குறிவைத்து இருக்கிறார்கள். இதுகுறித்து திமுக தலைமையிடம் பேசுவதாக நிர்வாகிகளை ஆறுதல்படுத்தி இருக்கிறார் கமல்ஹாசன்.
கமலை நெருக்கும் கட்சி நிர்வாகிகள்
கடந்த முறை 10 லட்சம் வாக்குகள் வாங்கினோம். கமல்ஹாசனுக்கு செல்வாக்கு இருக்கிறது. இதனால் திமுக நியாயமான தொகுதிகளை தர வேண்டும்.
சொந்த சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே கட்சி வளரும், மக்கள் நம்பிக்கை வைப்பார்கள், என்று கட்சி நிர்வாகிகள் கமலுக்கு நெருக்கடி தந்து வருகிறார்கள்.
==================