கரூர் தவெக சம்பவம் - சிபிஐ விசாரணை
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூர் சம்பவம் தொடர்பாக, தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருக்கும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்க்கும் சிபிஐ சம்மன் அனுப்பி இருக்கிறது.
திங்கட்கிழமை ஆஜராகிறார் விஜய்
அதன்படி, தவெக தலைவர் விஜய் வரும் 12ம் தேதி ( திங்கட்கிழமை ) நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி இருக்கிறது. அந்த வகையில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் திங்கட்கிழமை விஜய் ஆஜராகிறார். கரூர் சம்பவத்தின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.
வேலுச்சாமிபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு
இதனிடையே, சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த மாதம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூத்த ஆலோசகர் அனுஜ் திவாரி தலைமையிலான குழுவினரும், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் அதிகாரிகளும் அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நேற்று, உள்துறை அமைச்சக அதிகாரிகளும் பிரச்சாரம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
விஜய் பிரசார வாகனத்தில் சிபிஐ ஆய்வு
இதைத்தொடர்ந்து, கரூர் மக்கள் சந்திப்பின் போது விஜய் பயன்படுத்திய பிரசார வாகனம் சென்னையில் இருந்து கரூர் கொண்டு வரப்பட்டது. அங்குள்ள சிபிஐ அலுவலகத்தில் பிரசார வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
பிரசார வாகனத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அவை பற்றி வாகன ஓட்டுனரிடம் அவர்கள் விசாரித்தனர்.
ஓட்டுநரிடம் பிரசார வாகனத்தை இயக்குமாறு கூறி, அதை அதிகாரிகள் பதிவு செய்தனர். சிபிஐ அதிகாரிகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தடவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
================