சென்னையின் தாகம் போக்கும் கிருஷ்ணா
சென்னையின் தாகத்தை தீர்க்க வறட்சி காலங்களில் வெளியூர்கள், ஆந்திராவில் இருந்தும் ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்த காலம் எல்லாம் உண்டு.
1976ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, 1977ம் ஆண்டு தமிழ்நாடு - ஆந்திர மாநிலங்களுக்கு இடையே நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டது.
எம்ஜிஆர் - என்டிஆர் ஒப்பந்தம்
1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரனும், ஆந்திர பிரதேச முதலமைச்சராக இருந்த என்.டி. ராமராவும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி, ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாடு எல்லையை வந்தடையணும்.
முழுமையாக நீர் கிடைப்பதில் சிக்கல்
ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவு முழுமையாகக் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து வருகின்றன. இதற்காகப் பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாடு முதலமைச்சர்கள், ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், கடிதங்கள் எழுதியும் கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்.
விஜய் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு
இந்த ஆண்டு சென்னைக்கான கிருஷ்ணா நதி நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று விஜயவாடா சென்று, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
தமிழகம் நோக்கி வரும் கிருஷ்ணா நீர்
கிருஷ்ணா நதி நீரானது ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம், சோமசீலா நீர்த்தேக்கம், கண்டலேறு நீர்த்தேக்கம் வழியாக பயணித்து தெலுங்கு கங்கை கால்வாய் அடைகிறது.
அங்கிருந்து திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜீரோ பாயிண்ட் வழியாகத் தமிழ்நாட்டிற்குள் வரும் நீர், பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது.
சென்னைக்கு கிருஷ்ணா நீர் விநியோகம்
அதன் மூலம் சென்னையின் குடிநீர் தேவைக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மொத்தம் 15 டி.எம்.சி. தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பின்னர், நீரைக் கொண்டுவரும் கால்வாய்களில் ஏற்படும் கசிவு, ஆவியாதல் உள்ளிட்ட இழப்புகளைக் கணக்கில் கொண்டு, தமிழ்நாடு எல்லையில் ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் வகையில் திட்டம் வரையறுக்கப்பட்டது.
கால்வாயைச் சீரமைத்த சத்ய சாய் பாபா:
தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் தண்ணீர் கொண்டுவருவதில் கால்வாய்களின் நிலை முக்கியப் பிரச்சினையாக இருந்தது. இதனால் எதிர்பார்த்த அளவுக்குத் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில், 2002-ஆம் ஆண்டு ஆன்மீகத் தலைவர் சத்ய சாய் பாபா, கால்வாயைச் சீரமைத்து அதன் கரைகளைப் பலப்படுத்துவதற்கான பணிகளில் பங்களிக்க முன்வந்தார்.
இதையடுத்து, கால்வாய் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சாய் கங்கா திட்டம்
இந்தப் பணிகள் 2004-ஆம் ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கிருஷ்ணா நதிநீர் பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது. சத்ய சாய் பாபாவின் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்ட நீர்வழிக் கட்டமைப்பு சாய் கங்கா என்றும் அழைக்கப்படுகிறது.
இருப்பினும், கால்வாய் சீரமைக்கப்பட்ட பிறகும், ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் முழுமையாகக் கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை.
ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள்
2004ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, கிருஷ்ணா நதி நீரை திறக்க கோரி அப்போதைய ஆந்திர மாநில முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
2005ஆம் ஆண்டு சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்காக கிருஷ்ணா நீரை உடனடியாக வழங்க வேண்டும் என்று அப்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
சந்திரபாபு நாயுடுவை சந்தித்த ஓபிஎஸ்
2017ஆம் ஆண்டுசென்னையின் குடிநீர்த் தேவைக்காக முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். பின்னர் விஜயவாடா சென்று ஆந்திர முதல்வரையும் சந்தித்து பேசினார்.
எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட நடவடிக்கை
தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டு சென்னையில் கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திரப் பிரதேச அரசிடம் கிருஷ்ணா நதிநீரைத் திறந்துவிடக் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, தமிழ்நாட்டின் சார்பில் அப்போதைய அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, டி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை விஜயவாடாவில் சந்தித்தனர்.
திமுக ஆட்சியில் கடிதம்
கடந்த திமுக ஆட்சி காலத்திலும் கிருஷ்ணா நதி நீரை திறக்க கோரி தமிழ்நாடு அரசு சார்பில் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.
கிருஷ்ணா நீர் திறப்பு நிறுத்தம்
இந்நிலையில், 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு குறைந்ததால், சென்னைக்கான கிருஷ்ணா நதிநீர் திறப்பு நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இதுவரை 2.23 டிஎம்சி கிருஷ்ணா நீர் மட்டுமே தமிழகத்திற்கு வந்து இருக்கிறது.
இதற்காக, ஆந்திரா சென்றிருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய், அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து 12 டிஎம்சி தண்ணீரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கிறார்.
மேலும் ஆந்திர அரசு மேற்கொள்ள இருக்கும், அணைகள் தொடர்பான விவகாரங்களும் பேசப்பட வாய்ப்புள்ளது.
=============================