Kumbakonam School Fire Accident 22nd Anniversary 94 Children Remembrance Day google
தமிழ்நாடு

கும்பகோணம் பள்ளி தீ விபத்து : ’அரசுப் பணி வழங்க வேண்டும்’ : 22ம் ஆண்டு நினைவு தினத்தில் பெற்றோர் கோரிக்கை !

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்ததன் 22-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

Kavitha prasanna

Kumbakonam School Fire Accident 22nd Anniversary 94 Children Remembrance Day

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொடூரமான பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம், இன்று வியாழக்கிழமை (ஜூலை 16) அனுசரிக்கப்பட்டது.

22 ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடுவாக இருக்கும் இந்த சோக வடுக்களைச் சுமந்து கொண்டு, உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

2004-ல் நிகழ்ந்த கோர சம்பவம்

கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி, கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது.

கண்ணீர் அஞ்சலி மற்றும் மோட்ச தீபம்

விபத்து நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி, கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி கூட்டங்கள் நடைபெற்றன.

நினைவஞ்சலி கூட்டம்

காசிராமன் தெருவில் தீ விபத்து நிகழ்ந்த பள்ளிக்கு முன்பாக, குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அங்கு உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது.

தங்களது உயிரிழந்த குழந்தைகளின் உருவப்படங்களைப் பார்த்த தாய்மார்கள், அவர்களுக்குப் பிடித்த தின்பண்டங்களை வைத்து கதறி அழுதது பார்ப்போரை கலங்கச் செய்தது.

பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில் மலர்வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இன்று மாலை புகழ்பெற்ற மகாமக குளத்தில் உயிரிழந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.

பெற்றோர்கள் மற்றும் அமைப்புகளின் முக்கியக் கோரிக்கைகள்

இந்த நினைவு தினத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் சமூக அமைப்புகள் சில முக்கியக் கோரிக்கைகளைத் தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளனர்.

"22 ஆண்டுகள் ஆகியும் இந்த சம்பவம் ஆறாத வடுவாக இருக்கிறது. இந்த நாளில் கும்பகோணம் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என 22 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.

அடுத்த ஆண்டாவது தமிழக முதல்வர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்புகிறோம் என்று விபத்தில் உயிரிழந்த சுஷ்மிதாவின் சகோதரி மதுமிதா கூறியுள்ளார்.

அரசுப் பணி கோரிக்கை

அதேபோல் "தவெக தலைவர் விஜய் கரூர் சென்றபோது உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கியுள்ளார். அதேபோல், கல்வி கற்க சென்று உயிரிழந்த எங்களது குழந்தைகளின் குடும்பத்தினருக்கும் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும்.

இது குறித்து கும்பகோணம் எம்.எல்.ஏ-வும், வேளாண்மைத் துறை அமைச்சருமான வினோத்தைச் சந்தித்து, அவர் மூலமாகத் தமிழக முதல்வர் விஜய்யை வலியுறுத்த உள்ளோம்" என்று விபத்தில் இரண்டு குழந்தைகளை இழந்த தந்தை இன்பராஜ் கூறியுள்ளார்.

குழந்தைகள் பாதுகாப்பு தினம்

தொடர்ந்து மாணவர் அரண் அமைப்பின் தமிழ்நாடு தலைவர் சைமன், ஜூலை 16-ஆம் நாளை 'குழந்தைகள் பாதுகாப்பு தினமாக' அறிவிக்க வேண்டும் என்றும், தற்போது சேதமடைந்துள்ள நினைவுப் பூங்காவை உடனடியாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

=====