தமிழகத்தில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் போன்ற பொது உட்கட்டமைப்புகளில் உள்ள சாதி சார்ந்த பெயர்களை நீக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
பட்டியலின மக்களுக்கு அநீதி
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில், பட்டியலின மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்கள் ஓராயிரம். வேங்கை வயல் சம்பவத்துக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை. பல பகுதிகளில் இரட்டை குவளை, இரட்டை சுடுகாடு, கோவில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் என கொடுமை நிலவுகிறது.
நாயன்மார்கள், ஆழ்வார்கள் எங்கே?
ஆனால், சாலைகளுக்கு சாதி பெயர் நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக புதிய புரட்டு வேலையை திமுக அரசு தொடங்கி இருக்கிறது. திமுக அரசு வெளியிட்ட மாற்றுப் பெயர்கள் பட்டியலில், தமிழை வளர்த்து பக்தி புரட்சியை ஏற்படுத்திய நாயன்மார்கள், ஆழ்வார்கள் பெயர் இல்லை.
விடுதலை வீரர்கள் பெயர் இல்லை
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் என யார் பெயரும் இல்லை. தமிழக வளர்ச்சிக்கு பங்களித்த முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என யார் பெயரும் உங்களுக்கு பிடிக்காது.
கருணாநிதி பெயர் திணிப்பு
ஆனால், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி என திமுக கம்பெனி பெயர்களை மட்டும் வைக்க வேண்டுமா? சாதி பெயர் நீக்கம் என்ற பெயரில் திமுக அரசு அரங்கேற்ற திட்டமிட்டுள்ள நாடகம் வெளிப்பட்டு விட்டது. பார்க்கும் இடமெல்லாம் தன் தந்தை கருணாநிதி பெயர் இருக்க வேண்டும் என கனவு காண்கிறார் முதல்வர் ஸ்டாலின்” இவ்வாறு அந்த அறிக்கையில் எல். முருகன் விமர்சித்து இருக்கிறார்.
=========