விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் :
Madras HC on Taiwanese Dean Shoe Factory : கடலூர் அருகே வெள்ளக்கரை ஊராட்சிக்குட்பட்ட கொடுக்கன்பாளையம், மலையடிகுப்பம், பெத்தாங் குப்பம், கீரப்பாளையம், காட்டாரசாவடி கிராமங்கள் உள்ளன. ஐந்து தலைமுறைகளாக அரசு தரிசு நிலத்தில் வேளாண் பயிர் செய்து வருகின்றனர் விவசாயிகள். இவர்கள் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி, விடுத்த வேண்டுகோளுக்கு அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. எனவே, தங்கள் கோரிக்கையை முன்வைத்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
விளை நிலங்களை அழித்து காலணி தொழிற்சாலை :
இந்நிலையில் அவர்கள் பயிர் செய்து வரும் முந்திரி, மா, பலா, வாழை உள்ளிட்ட பணப் பயிர்களை, அதாவது 9 ஆயிரம் மரக்கன்றுகளை அழித்து, அந்தப் பகுதியில் காலணி உற்பத்தி தொழிற்சாலை(Shoe Factory) அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க : மாநகராட்சியில் 200 கோடி முறைகேடு : திமுக அரசுக்கு நீதிமன்றம் கெடு
விவசாயிகள் எதிர்ப்பு, தொடர் போராட்டங்கள் :
இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை(Ungaludan Stalin Scheme) துவக்கி வைக்க சிதம்பரத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலூர் பகுதியில் 12000க்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெறும் வகையில் 140 ஏக்கரில் 75 கோடி மதிப்பீட்டில் தோல் இல்லாத காலணி தொழிற்சாலை அமைக்கப்படும் என அறிவித்தார்.
காலணி தொழிற்சாலைக்கு எதிர்ப்பு :
இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் மலையடிகுப்பம் கிராமத்தில் விவசாய நிலங்களை அழித்து காலணி தொழிற்சாலை(Shoe Factory Issue) அமைக்கக்கூடாது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி 15ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கு :
அவர்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டது. இது தொடர்பாக அவசர வழக்கு ஒன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், காலணி ஆலைக்கு நிலம் எடுக்கவும், விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மீண்டும், மீண்டும் விவசாயிகள் கோரிக்கை :
பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் முடிவெடுக்கும் வரை விவசாயிகளை வெளியேற்றக் கூடாது. விவசாயிகளுக்கு எதிராக முடிவு எதுவும் எடுக்கப்பட்டால் மேல்முறையீடு செய்ய 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் ஆணையிட்டனர். நீதிமன்றம் மூலம் தடை கிடைத்து இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காலணி தொழிற்சாலை திட்டத்தை கைவிட்டு, தங்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
======