Madras High Court issued sweeping order, ordering seizure of a book written criticizing Judge G.R. Swaminathan 
தமிழ்நாடு

நீதிபதி சுவாமிநாதனை விமர்சித்து புத்தகம் : பறிமுதல் செய்ய உத்தரவு

'' நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை விமர்சித்து எழுதப்பட்ட புத்தகத்தை பறிமுதல் செய்ய வேண்டும்,'' என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்து இருக்கிறது.

Kannan

திருப்பரங்குன்றம் தீபம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனால், இந்த உத்தரவை தமிழக அரசு பின்பற்றவில்லை.

தீபத் தூணில் தீபம் - நீதிமன்றம் உத்தரவு

உத்தரவை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த இரண்டு நீதிபதிகள் அமர்வு, நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை பின்பற்றி, தீபத் தூணில் தீபம் ஏற்றலாம், இதை கோவில் தேவஸ்தானம் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இருக்கிறது.

நீதிபதியை விமர்சித்து புத்தகம்

இதனிடையே, நீதிபதி சுவாமிநாதனை விமர்சித்து கீழைக்காற்று பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் ஒன்றை சென்னை புத்தக கண்காட்சியில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கு பாஜ உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.

புத்தகத்திற்கு தடை கோரிய வழக்கு

இந்த புத்தகத்துக்கு தடை விதிக்கக்கோரி ஜெகன்னாத் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையிட்டு இருந்தார். இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் பிற்பகல் 2:15 மணிக்கு ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டு இருந்தார்.

புத்தகத்தை பறிமுதல் செய்க

அதன்படி, பிற்பகல் விசாரணைக்கு வந்த போது தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், '' நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை விமர்சித்து வெளியாக உள்ள புத்தகத்தை பறிமுதல் செய்ய வேண்டும். பொறுப்பில் உள்ள நீதிபதியை எப்படி விமர்சிக்க முடியும். எந்த வகையிலும் புத்தகம் வெளிவராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறிவுசார் தளத்தில் அனுமதிக்க முடியாது

புத்தகத்தில் அவதூறு வார்த்தைகள் மட்டும் அல்ல கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. அறிவுசார் தளமான புத்தக கண்காட்சியில் இதுபோன்ற செயல்களுக்கு ஒரு போதும் அனுமதி தர முடியாது. '' என தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு உறுதி

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், '' நீதிமன்றம் குறிப்பிட்ட புத்தகம் நாளை விற்பனைக்கு வெளி வராத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என உறுதியளித்தார்.

=====