Madras High Court Stays By-Election Notification For 5 Constituencies Including Trichy East google
தமிழ்நாடு

திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதிகளின் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருச்சி கிழக்கு, கரூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட ஜூலை 31 வரை தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Kavitha prasanna

Madras High Court Stays By-Election Notification For 5 Constituencies Including Trichy East

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமாவால் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர் உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமாவும் பொதுநல வழக்கும்

நடந்து முடிந்த தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதியை ராஜிநாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை எம்.எல்.ஏ சி. விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

இவர்களின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட காரசார வாதங்கள்

தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பல்வேறு தரப்பிலிருந்தும் முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

குழப்பமான நிலை ஏற்பட வாய்ப்பு?

தேர்தல் வழக்குகளில் தங்களை வெற்றிபெற்றவராக அறிவிக்க வேண்டும் எனப் வேட்பாளர்கள் கோருவது வழக்கம். ஒருவேளை இடைத்தேர்தல் நடத்தி புதிய எம்.எல்.ஏ தேர்ந்தெடுக்கப்பட்ட பின், முந்தைய தேர்தல் வழக்கில் வழக்குத் தொடர்ந்தவரை வெற்றிபெற்றவராக நீதிமன்றம் அறிவித்தால், ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் என்ற குழப்பமான நிலை ஏற்படும்.

எனவே, 1967 முதல் 2018 வரையிலான உச்சநீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில், தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என வாதிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பு

தேர்தல் வழக்குகள் தொடர்பான முழுமையான ஆவணங்கள் இன்னும் தங்களுக்கு வந்து சேராத காரணத்தால், இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தால் உடனடியாக எவ்வித நிலைப்பாட்டையும் தெரிவிக்க இயலாது எனக் கூறப்பட்டது.

தமிழக அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர்

தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் முறையாக தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே முதல்வர் விஜய் உள்ளிட்டோர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டனர். அவர்கள் ராஜிநாமா செய்த சமயத்தில் எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை என வாதிடப்பட்டது.

முதல்வர் விஜய் தரப்பு

இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள 5 தொகுதிகளிலும் மனுதாரர் ஒரு வாக்காளராகக் கூட இல்லாத பட்சத்தில், இந்த வழக்கைத் தாக்கல் செய்ய அவருக்கு அடிப்படை உரிமை இல்லை. மேலும், இடைத்தேர்தலை நடத்துவதா, இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் மட்டுமே உள்ளது என வாதிடப்பட்டது.

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

அனைத்துத் தரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த நீதிபதிகள், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதை வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை நிறுத்திவைக்க உத்தரவிட்டனர்.

மேலும், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டமன்ற செயலாளர் மற்றும் முதல்வர் விஜய் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

=====