வைரமுத்து தாக்கல் செய்த வழக்கு :
Madras High Court on Vairamuthu Case : எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கவிஞர் வைரமுத்து(Vairamuthu), வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
திலகவதி வழக்கில் மேல்முறையீடு :
வைரமுத்து தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், ஏற்கனவே பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்த வழக்கில், இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை பின் தேதியிட்டு அமல்படுத்துவதாக அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்ததை சுட்டிக் காட்டினார். அவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கண்டனம் :
இதைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இது ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல். ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுக்கு இணையாக ஒரு அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள். இது துரதிஷ்டவசமானது என கண்டனம் தெரிவித்தார்.
எழுத்தாளர்களுக்கு வீடு உணர்வு பூர்வமானது :
எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு(House for Writers) செய்தது என்பது உணர்வு பூர்வமான விஷயம். இது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தெரியாது. அவர்கள் அதிகார தொனியிலேயே செயல்படுவார்கள். கருணாநிதி(Karunanidhi) இருந்து இருந்தால், இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்.
இணை அரசாங்கம் ஆபத்தானது :
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்(Justice Anand Venkatesh) எச்சரித்தார்.
=====