High Court on Madurai Corporation Property Tax 200 Crore Fraud Case 
தமிழ்நாடு

மாநகராட்சியில் 200 கோடி முறைகேடு : திமுக அரசுக்கு நீதிமன்றம் கெடு

Madurai Corporation Property Tax Case : மதுரை மாநகராட்சி வரிவிதிப்பில் 200 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக, தமிழக அரசு 25ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Kannan

மதுரை மாநகராட்சியில் முறைகேடு :

Madurai Corporation Property Tax Case : மதுரை மாநகராட்சியில், 2023, 2024ம் ஆண்டுகளில், தனியார் கட்டடங்களுக்கு விதிகளை மீறி சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. சைபர் கிரைம் போலீசார் கொடுத்த அறிக்கை அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறைகேட்டில் மண்டல தலைவர்கள் :

இதில் மண்டல தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மண்டல தலைவர்கள் 5 பேரும், நிலைக்குழு தலைவர்கள் இருவரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக மாநகராட்சி அலுவலர், கவுன்சிலர்கள், ஆளுங்கட்சியினர் என 55 பேர் பட்டியலை காவல்துறையினர் தயாரித்து, விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 200 கோடி மதிப்புக்கு மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஊழலைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

மேலும் படிக்க : விசாரணை என்ற பெயரில் ”கொலை” : அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு :

மாநகராட்சி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்(Madurai High Court Bench) பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம், மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை மதுரை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., மதுரை போலீஸ் கமிஷனர் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. தமிழக அரசு தரப்பில் ஜூலை 25ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

=====