தாமிரபரணி ஆறு
தென் தமிழகத்தில் பாயும் ஜீவநதி புனித தாமிரபரணி ஆறு. இதில் மதச் சடங்குகள் என்ற பெயரில் துணிகள் வீசப்படுவதால், சுற்றுச்சூழல் மாசடைவதாக கூறி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
ஆற்றில் துணிகள் வீச எதிர்ப்பு
தாமிரபரணி ஆற்றில் துணிகளை வீசுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரித்தது. இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”தாமிரபரணி ஆற்றின் படித் துறைகளில் முன்னோருக்குச் சடங்கு செய்யும் போது, தினமும் ஒரு டன்னுக்கு குறையாத அளவு பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படாத ஆடைகள், துண்டுகள், காலணிகள் மற்றும் இறந்தவர்களுடன் தொடர்புடைய பொருட்கள் ஆற்றில் வீசப்படுகின்றன.
மதத்தின் பெயரால் நீர்நிலையை மாசுபடுத்த கூடாது
மதத்தின் பெயரால்கூட நீர்நிலையை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை. தூய பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகள் இயற்கையில் மட்கக் கூடியவை. பாலியஸ்டர் துணிகள் மக்குவதில்லை.
ஆமைகள், மீன்களுக்கு ஆபத்து
நூறு ஆண்டுகள் வரை வாழும் இந்தியக் கருப்பு ஆமை மற்றும் இந்திய ஃப்ளாப்ஷெல் ஆமைகளின் வாழ்விடமாக தாமிரபரணி ஆறு உள்ளது. இந்த வகை ஆமைகள், ஆற்றில் வீசப்பட்ட துணிகளில் சிக்கி இறக்கின்றன.
ஆற்றில் வீசப்படும் சோப்பு, ஷாம்பு போன்ற ரசாயனங்களின் பயன்பாடு மீன்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.
நீர் நிலைகளை காக்க வேண்டும்
நீர் நிலைகளை எந்த வகையிலும் மாசுபடுத்துவதை ஏற்க முடியாது. சம்பிரதாயங்கள் இந்துக்களின் நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளுடன் தொடர்புடையது.
தாமிரபரணி ஆற்றங்கரையில் சடங்குகள் மற்றும் வழிபாடுகளை முறைப்படுத்துவதால் அடிப்படை உரிமைகள் மீறப்படாது.
இந்துக்கள் வழிபடும் தாமிரபரணி
சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல், மக்களின் உரிமைகளை மீறாமல் இருக்கும் நிலையில் பக்தர்கள் ஆன்மிகச் செயல்களை மேற்கொள்ளலாம்.
இந்துக்களால் தாமிரபரணி ஆறு புனிதமானதாகக் கருதப்படுவதையும், அதை வழிபடுவதையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
தாமிரபரணிக்கு ’ஒரு நபர்’ அங்கீகாரம்
தாமிரபரணி ஆறு ‘தாமிர தேவி'யாக உருவகப்படுத்தப்படுகிறது. தாமிரபரணி ஆற்றை ‘ஒரு நபராக’ நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆறுகளைத் தெய்வங்களாகக் கருதும் நாம்தான் கழிவுகளையும் உருவாக்குகிறோம்.
ஆடைகளை வீசத் தடை
எனவே, தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் மற்றும் பிற பொருட்களை வீசத் தடை விதிக்கப்படுகிறது. ஆற்றை மாசுபடுத்துவது நீதிமன்ற அவமதிப்புச் செயலாகக் கருதப்படும் என்று மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆற்றை மாசுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
======================