திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்
G.R. Swaminathan Judgement : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. ஐகோர்ட் மதுரைக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டும், அமல்படுத்தாமல் தி.மு.க., அரசு பிடிவாதம் காட்டியது. இதனால் ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதனிடையே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில், '' மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை?'' என, மதுரை மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி உத்தரவுக்கே மேல்முறையீடு
இந்த வழக்கில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், வீரகதிரவன், விகாஸ் சிங் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது தமிழக அரசு தரப்பில்,'மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் மலை, திரி, எண்ணெய் எங்கும் போய் விடாது. நீதிபதி உத்தரவு சரியா, தவறா என்பதற்கே மேல்முறையீடு.
எப்படி இடைக்கால உத்தரவு கோர முடியும். கோயில்களில் இதைச் செய்யக்கூடாது. இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்ல முடியாது என்றும் நீதிமன்றம் கூட தேவஸ்தானமே முடிவு செய்ய இயலும். இது குறித்த விரிவான உத்தரவுகள் உள்ளன. பிரச்னை வந்தால் நீதிமன்றத்தை காரணம் காட்ட இயலாது உள்ளிட்ட கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது.
ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவு
மேலும், அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். சட்டம் ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டும். மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் அதன் பின் இந்த வழக்கை பட்டியலிட வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச்செயலாளர், ஏடிஜிபி ஆகியோர் வரும் 17 ம் தேதி காணொலியில் ஆஜராக வேண்டும் எனவும், மத்திய உள்துறை அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்கவும் மதுரை போலீஸ் துணை கமிஷனரும் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.