கரூர் கூட்ட நெரிசல்
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
தவெக ஆட்சி அமைந்த பிறகு, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டது.
31 பேருக்கு அரசுவேலை
அதன்படி, கரூரில் கடந்த 10ம் தேதி நடந்த நிகழ்வில் உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு, அவர்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிக்கான ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.
பொதுநல மனுக்கள் தாக்கல்
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்க தடை விதிக்கக் கோரி நாதக நிர்வாகி தீரன் திருமுருகன், மதுரை வழக்கறிஞர் சீனி அகமது மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர்.
விசாரணையை பாதிக்கும் என வாதம்
‘கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் உள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையை பாதிக்கும்.
சாட்சிகளை கலைக்கும் நடவடிக்கையாகும். இது தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தும். போட்டித் தேர்வு, தகுதி அடிப்படையில் மட்டுமே அரசுப் பணி வழங்க வேண்டும்.
எனவே சிபிஐ, உச்ச நீதிமன்ற விசாரணை முடியும் வரை அரசு வேலை வழங்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ என்று மனுக்களில் கோரப்பட்டது.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது.
மனுதாரர்கள் வாதம்
அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு, பகலாக தயாராகி வருகின்றனர். அப்படி இருக்க, நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது சட்ட விரோதம்.
கருணை அடிப்படையில் பணி எப்படி வழங்க வேண்டும் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதை பின்பற்றாமல் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.
அரசுப்பணி தேவையில்லை
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கிய பிறகும், அரசுப் பணி வழங்க வேண்டிய அவசியம் என்ன?.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியதாக அரசுத் தரப்பு கூறுகிறது. அந்த சம்பவங்களுடன் கரூர் சம்பவத்தை ஒப்பிட முடியாது.
அரசுத் தரப்பு வாதம்
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்காலிகப் பணியே, அதுவும் சாதாரணப் பணியே வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும் இதுபோன்ற பல சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு கருணைப் பணி வழங்கப்பட்டுள்ளது.
இது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
பாதிக்கப்பட்டோர், தங்கள் குடும்பத்தில் விலைமதிக்க முடியாத ஒருவரை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில்தான் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் வழக்கு விசாரணை எந்த வகையிலும் பாதிக்காது. ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதாக இருக்காது என்பதாலேயே அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.
வயது, கல்வித் தகுதி தொடர்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே கருணைப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதை ஏன் எதிர்க்க வேண்டும்?
ஒவ்வொரு துறையிலும் காத்திருப்போர் பட்டியல் உள்ளது. அதை பரிசீலித்து முறைப்படியே பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். உடனடியாக பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள்.
இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு
கரூர் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் சூழலில் அதுபற்றி கருத்து தெரிவிக்க நீதிமன்றம் விரும்பவில்லை.
அதேநேரம், அரசுப் பேருந்து விபத்துகள், சிவகாசி பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கும் இதேபோல அரசு வேலை கேட்டால் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது.
கருணை அடிப்படையிலான வேலை என்பது அரசுப் பணியில் இருந்து உயிரிழப்போரின் வாரிசுகளுக்கு வேலை வழங்க மட்டுமே பொருந்தும்.
திறன் பயிற்சி வழங்கலாம்
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு உதவி செய்வதாக இருந்தால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு திறன் பயிற்சிகளை வழங்கி உதவலாம். இவ்வாறு பணி வழங்குவதைவிட அது பயனுள்ளதாக இருக்கும்.
அரசுப் பணியில் எதுவும் சாதாரணப் பணி அல்ல. அது ஒருவரது குடும்பத்துக்கு உதவும் பணியே.
அரசுப் பணிக்கான அரசாணை ரத்து
எனவே, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்கி பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
==================