நீதிபதி G.R. சுவாமிநாதன் கார்த்திகை தீபத்தை ஒட்டி தமிழகத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதியாக இருக்கிறார்.
நாடு முழுவதும் விவாதப் பொருள்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரிய வழக்கில் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.நீதிபதிக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் விவாதங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இண்டியா கூட்டணி மனு
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி மக்களவை சபாநாயகரிடம் மனு அளித்தனர்.
வழக்கறிஞர்கள் ஆதரவு
இந்த மனு அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் ஆட்சேபனை தெரிவித்தார். உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஏராளமானோர் தாங்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து வருகின்றனர்.
9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகள் தீர்வு
இந்த பரபரப்புக்கு இடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் கடந்த 9 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 1,20,426 வழக்குகளை விசாரித்து முடித்திருக்கும் விவரம் வெளியாகியுள்ளது.
இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 2017 முதல் 30.11.2025 வரை 2,138 ரிட் மேல்முறையீடு மனுக்கள், 3,751 நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை விசாரித்து இருக்கிறார்.
73 ஆயிரம் பிரதான மனுக்கள் விசாரிப்பு
41,920 ரிட் மனுக்கள், 434 ஆள்கொணர்வு மனுக்கள், 540 குற்றவியல் மேல்முறையீடு, 18,392 குற்றவியல் மனுக்கள், 780 குற்றவியல் சீராய்வு மனுக்கள் உட்பட 73,505 பிரதான மனுக்களை விசாரித்துள்ளார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
வழக்குகளை விசாரிப்பதில் வல்லவர்
46,921 இதர வகை மனுக்களை விசாரித்துள்ளார். மொத்தம் 1,20,426 வழக்குகளை விசாரித்து முடித்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சிலர் கூறுகையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிமன்ற நேரம் தாண்டியும் வழக்குகளை விசாரிப்பார்.
9 மணிக்கே நீதிமன்றம் வந்து விடுவார்
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு காலை 10.30-க்கு தொடங்கும். ஆனால் ஜி.ஆர்.சுவாமிநாதன் பல நாட்கள் காலை 9 மணிக்கே விசாரணையை தொடங்கி விடுவார் என்கின்றனர். வழக்குகளை உரிய முறையில் விசாரித்து தீர்வு கொடுப்பதில் அதிக அக்கறை கொண்டவர் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
===============