Madurai Tanishq Jewellery Robbery Accused Nishanth Arrested
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை பின்னணி
டாடா குழுமத்தின் பிரபல நகைக்கடையான தனிஷ்க் ஜுவல்லரியின் புதிய ஷோரூம், மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் சமீபத்தில் திறக்கப்பட்டது.
எனினும் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் முன்னரே திறக்கப்பட்ட இந்த கடைக்குள் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை புகுந்த மர்ப நபர், அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் பெரிய கொள்ளைக் கும்பல் தான் இதன் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், 9 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
தனி ஒருவனாக கைவரிசை காட்டிய யூடியூபர்
போலீசாரின் விசாரணையில், உடல் முழுவதும் கருப்புத் துணியை சுற்றிக்கொண்டு முகமூடி மற்றும் கையுறை அணிந்தவாறு தனி ஒருவனாகக் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்தது பழங்காநத்தம் அருட்பெரும் ஜோதி தெருவைச் சேர்ந்த சுரேஷ் மகனான நிஷாந்த் (வயது 25) என்பதும், இவர் ஒரு யூடியூபர் என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.
நிஷாந்தின் காதலி மற்றும் தந்தை கைது
இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு நிஷாந்தின் காதலியும், மதுரையைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டா இன்ஃபுளூயன்சருமான மீனாட்சி (வயது 23) என்பவரும், நிஷாந்தின் தந்தை சுரேஷும் (வயது 50) உடந்தையாக இருந்தது தெரியவந்தது. மீனாட்சியின் ஸ்கூட்டரில் சென்றுதான் நிஷாந்த் இந்தக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளார்.
கொள்ளையடித்த நகைகள் மீட்பு
இதையடுத்து நிஷாந்தின் காதலி மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், மீனாட்சியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மதுரை மாடக்குளம் கண்மாய் கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5.5 முதல் 6 கிலோ வரையிலான தங்க, வைர நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி சேஷம்பட்டியில் நிஷாந்த் அதிரடி கைது
இதையடுத்து பொள்ளாச்சி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தனிப்படை போலீசார் நிஷாந்தை வலைவீசித் தேடி வந்த நிலையில், 5 நாட்களாகத் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான நிஷாந்தை தர்மபுரி மாவட்டம் சேஷம்பட்டி அருகே ஆம்னி பேருந்தில் வைத்து காவல்துறையினர் இன்று அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நிஷாந்தை மதுரைக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட எஞ்சிய நகைகளும் விரைவில் முழுமையாக மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
===============