ஜெக்தீப் தன்கர் ராஜினாமா :
Vice President Candidate C.P. Radhakrishnan : குடியரசு துணைத் தலைவராகவும், மாநிலங்களவை தலைவருமாக இருந்தவர் ஜெக்தீப் தன்கர். 14வது குடியரசு துணைத் தலைவராக 2022 ஆகஸ்டில் பதவியேற்ற இவர், உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த ஜூலை 21ம் தேதி பதவி விலகினார். பதவிக்காலம் முடிவடையும் முன்பே ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்தது, டில்லி வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.
துணை ஜனாதிபதி தேர்தல் :
இதையடுத்து, 15வது குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க செப்டம்பர் 9ல் தேர்தல் நடக்கும் என்றும், வாக்குப்பதிவு முடிந்ததும், அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி துவங்கிய நிலையில், 21ம் தேதி வரை வரை மனு தாக்கல் செய்யலாம்.
பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் :
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் குழு கூட்டம் டெல்லியில் நடந்தது.பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டி :
பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இது பற்றி அறிவிப்பை வெளியிட்ட ஜே.பி. நட்டா, சி.பி. ராதாகிஷ்ணனை போட்டியின்று தேர்வு செய்ய, எதிர்க்கட்சிகளுடன் பேசுவோம் என்றார். டெல்லியில் இன்று நடைபெறும் என்டிஏ. எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி. ராதாகிஷ்ணனை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைப்பார்.
21ம் தேதி மனுத்தாக்கல் :
21ம் தேதி சி.பி.ராதா கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று, கூறப்படுகிறது. அந்த நிகழ்வில், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்பர் எனத் தெரிகிறது.
தலைவர்கள் வாழ்த்து :
தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், எல்.முருகன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளராக, தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது
=====