Mamallan Reservoir Water Storage To quench Chennai's thirst, new drinking water reservoir built in Nemmeli at estimated cost of Rs.342 crore 60 lakh Google
தமிழ்நாடு

342.60கோடியில் ’மாமல்லன்’ நீர்த்தேக்கம்:சென்னை மக்களே பஞ்சமே வராது

Mamallan Reservoir Water Storage : சென்னையின் தாகத்தை தீர்க்கும் வகையில் நெம்மேலியில் ரூ.342 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் நீர்த்தேக்கம் கட்டப்படுகிறது.

Kannan

சென்னை அருகே புதிய நீர்த்தேக்கம்

Mamallan Reservoir Water Storage : சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. அதற்கு ஏற்ப மக்கள் தொகை பெருக்கமும் அதிகரித்து வருகிறது.

இவர்களுக்கான குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும், நீர் வழங்கலை பரவலாக்கவும், செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழக அரசு முடிவு எடுத்தது.

5,161 ஏக்கரில் நீர்த்தேக்கம்

இந்தப் புதிய நீர்த்தேக்கம் சென்னை வடிநிலப்பகுதியில் உள்ள கோவளம் உபவடிநிலப் பகுதியில் அமையவுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையே உள்ள 3010 ஏக்கர் உப்பளப் பகுதி உட்பட மொத்தம் 5161 ஏக்கர் அரசு நிலங்களில் அமைக்கப்படவுள்ளது.

பக்கிங்காம் கால்வாய் மழைநீர்

முட்டுக்காடு பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவிற்கு மட்டுமே பக்கிங்காம் கால்வாய் வழியாக உயர்ந்த அலையின் (High Tide) பொழுது கடல்நீர் உள்ளே வருகிறது.

இவ்வாறாகவே கோகிலமேடு முகத்துவாரத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவிற்கு மட்டுமே பக்கிங்காம் கால்வாய் வழியாக உயர்ந்த அலையின் (High Tide) பொழுது பக்கிங்காம் கால்வாய் வழியாக கடல்நீர் உள்ளே வருகிறது.

இதற்கு இடைப்பட்ட பகுதியில் பக்கிங்காம் கால்வாய் தூர்ந்து கடல்நீர் உள்வருவதில்லை. மேலும் மழைக்காலங்களில் இப்பகுதி முழுவதும் மழை நீர் மட்டுமே தேங்கி அதன்பின் கடலில் மெதுவாக கலக்கிறது.

170 மில்லியன் லிட்டர் குடிநீர்

புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கு 34 கி.மீ நீளத்திற்கு மண் கரை அமைக்கும் பணி, கோகிலமேடு முகத்துவாரத்திற்கு வெள்ள நீர் செல்வதற்கு ஏதுவாக நீர் தேக்கத்தின் தெற்கு பகுதியில் நீரொழிங்கி அமைத்தல், நீர் உள்வாங்குவதற்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கும் தேவையான நீரொழிங்கிகள் அமைத்தல், தேவைக்கு அதிகமான வெள்ள நீரீனை மேற்கு மற்றும் கிழக்கு புற வெளிப்புற வடிகால்கள் மூலம் முட்டுக்காடு மற்றும் கோகிலமேடு முகத்துவாரங்கள் மூலம் வெளியேற்ற வடிகால்கள் அமைக்கும் பணிகள் அமையவுள்ளன.

மேலும், பக்கிங்காம் கால்வாய் திருவிடந்தையிலிருந்து மகாபலிபுரம் வரை முற்றிலுமாக சீரமைத்து கடல்நீர் வருவதற்கேற்ப புனரமைக்க உத்தேகிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை மக்களுக்கு வழங்க முடியும்.

13 லட்சம் மக்களுக்கு குடிநீர்

சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 13 இலட்சம் மக்கள் பயன்பெறுவர்.

மாமல்லன் நீர்த்தேக்கம்

“மாமல்லன்” என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கும் இந்த நீர்த்தேக்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை புனரமைத்து பாதுகாத்து சிறப்பான முறையில் செயலாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சிறந்த நீர் பாதுகாத்தல் விருதுகளை (Best Water Conservation Award) வழங்கப்பட்டது.

========================