சென்னையில் சுதந்திர தின விழா :
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் தேசிய கொடியை ஏற்றி வைத்த முதல்வர் ஸ்டாலின், முன்னதாக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
காந்திக்கு தமிழகத்தில் திருப்புமுனை :
சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு உரையாற்றிய அவர், ”தமிழகத்திற்கு 20 முறை வந்துள்ள மகாத்மா காந்தி, மதுரையில் தான் அரை ஆடை அணியும் முடிவை எடுத்தார். சென்னை அருங்காட்சியக வளாகத்தில் காந்தி சிலை அமைத்துள்ளோம். காக்கும் கரங்கள் திட்டத்தை ஆகஸ்ட் 19ல் தொடங்கி வைக்கவுள்ளேன்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19% :
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது பட்ஜெட்டில் கணித்ததை விட 1.5 சதவீதம் கூடுதலாகும். சமூக முன்னேற்ற குறியீடுகளில் 63.33 புள்ளிகளுடன் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. ஜவுளி, தோல் ஏற்றுமதி மாநிலங்களில் தமிழகம் முன்னிலை.
தமிழக அரசின் அறிவிப்புகள் :
* விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* வீரபாண்டிய கட்டபொம்மன், மன்னர் முத்துராமலிங்க சேதுபதிகள், மருது சகோதரர்கள், வஉசி வழிதோன்றல்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.11,000 ஆக உயர்த்தப்படும்.
* 2ம் உலகப்போரில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த படை வீரர்களுக்கான ஆயுட்கால மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* 2ம் உலகப்போரில் பங்கேற்று உயிர்நீத்த வீரர்களின் மனைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவி ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* முன்னாள் படை வீரர்களுக்கு மாதவரத்தில் ரூ.22 கோடியில் தங்கும் விடுதி
* தமிழகத்தில் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
* ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரு பயிற்சி மையங்களும், மாவட்டத்திற்கு ஓர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொடங்கப்படும்.
* தமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும் போது, திறனை மேம்படுத்த 10,000 மாணவர்களுக்கு ரூ.15 கோடி செலவில் இணையவழியில் திறன் மேம்பாட்டு சேவை
அதிகார பகிர்வில் பாரபட்சம் :
அதிகாரப்பகிர்வில் மாநில அரசுகளின் பங்கு தொடர்ந்து குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. மாநில அரசின் நிதிப் பங்கீட்டிலும் பாரபட்சம் காட்டுகிறது. இதற்கு முடிவு கட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதே ஒரே தீர்வு” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
===========