திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக மற்றும் ஒரு சில சிறிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
தொகுதி பங்கீட்டில் இழுபறி
இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக மற்றும் ஒருசில சிறிய கட்சிகளுக்கு திமுகவில் இன்னும் தொகுதி பங்கீடு முடியவில்லை.
கூடுதல் தொகுதிகள் எதிர்பார்ப்பு
இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பதால், இழுபறி நீடிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்று மூன்றாவது முறையாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் பேச்சுவார்த்தை
அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீடு குழுவினருடன், இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூடுதல் தொகுதிகள் தேவை என்பதில் உறுதியாக நின்றது.
கூடுதல் தொகுதிகளை வலியுறுத்தினோம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது போட்டியிட்ட தொகுதிகளை விட ( கடந்தமுறை 6 தொகுதிகள் ) கூடுதல் தொகுதிகளை வழங்க வேண்டும் என திமுகவிடம் நாங்கள் வற்புறுத்தியுள்ளோம்.
மார்க்சிஸ்ட் நம்பிக்கை
நிறைய கட்சிகள் இருப்பதால் இந்தப் பேச்சுவார்த்தை உடனடியாக முடிவுக்கு வருவதில் சிரமங்கள் உள்ளன.
ஆகவே, கூடுதல் தொகுதிகளை கேட்ட கோரிக்கை தொடர்பாக முதல்வரிடம் கலந்துபேசி இன்று இரவு சொல்வதாக திமுக தரப்பில் கூறியுள்ளனர்.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இதில் முடிவு எட்டப்படும் என நம்புகிறோம்.
கால அவகாசம் இருக்கிறது
ஏப்ரல் 30ம் தேதிதான் தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. எனவே, தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய கால அவகாசம் உள்ளது.
புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால், தொகுதிகளை குறைத்துக் கொள்ளுமாறு திமுக தரப்பில் எங்களிடம் வலியுறுத்தினர்.
குறைந்த தொகுதிகளை ஏற்க முடியாது
ஆனால், நாங்கள் அதனை ஏற்க முடியாது சொல்லிவிட்டோம். மார்க்சிஸ்ட் கடந்த முறை பெற்றதை விட கூடுதல் தொகுதிகளைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதில் உறுதியாக இருப்பதால்தான் பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது.
நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை
ஒவ்வொரு கட்சியும் அதன் பலத்துக்கு ஏற்ப தொகுதிகளைப் பெறுகின்றனர். எனவே காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளைப் பெற்றது பற்றி கவலை இல்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய பலத்துக்கு ஏற்ப கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கிறது” என்று, பெ. சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
===========