Mayiladuthurai DSP M Sundaresan Sensational Comment On Senior Officials 
தமிழ்நாடு

பறிக்கப்பட்ட டிஎஸ்பி வாகனம்:அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

Mayiladuthurai DSP M Sundaresan : உயரதிகாரிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

Kannan

விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி சுந்தரேசன் :

Mayiladuthurai DSP M Sundaresan : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை கண்காணிப்பாளராக இருப்பவர் சுந்தரேசன். காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் கொலை வழக்கு, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான என்கவுன்ட்டர் விசாரணை அதிகாரியாக இவர் இருந்துள்ளார். காவல்துறை தரப்பில் உள்ள தவறுகளை விசாரணையின் போது இவர் சுட்டிக்காட்டியதாகவும், சுட்டிக்காட்டியதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வாகனமின்றி நடந்தே சென்ற டிஎஸ்பி :

இந்தநிலையில், அவர் பயன்படுத்தி வந்த வாகனம் பறிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ரோந்து பணிக்காக சுந்தரேசனுக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தை மாவட்ட எஸ்பி. ஸ்டாலின், விஐபி பாதுகாப்பு பணிக்காக எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பழுதடைந்த வாகனத்தை மாற்று ஏற்பாடாக வழங்கியதால் அதை புறக்கணித்து விட்டு, தனது வீட்டில் இருந்து காவல் நிலையத்திற்கு சுந்தரேசன் நடந்தே சென்றார். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி, சர்ச்சையை ஏற்படுத்தியது.

டிஎஸ்பி பரபரப்பு பேட்டி:

இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிஎஸ்பி சுந்தரேசன்(DSP Sundaresan), காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்தூரியின் கொலை வழக்கில் எனது விசாரணை அறிக்கையை மாற்ற வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம், உளவுத்துறை ஐஜி செந்தில்வேல் ஆகியோர் தீவிரம் காட்டுகின்றனர். அவர்களின் தூண்டுதலின் பேரில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் எனது வாகனத்தை எடுத்துக்கொண்டு மன உளைச்சலைக் கொடுக்கிறார்.

நேர்மையாக பணியாற்றி வருகிறேன் :

நேர்மையான காவல் அதிகாரியான எனக்கு 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் நான் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தேன். ஆனால் நான் ஓய்வூதியம் கூட பெறக் கூடாது என்பதற்காக சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கைகளில் மாவட்ட எஸ்பி ஈடுபட்டுள்ளார். நான் லஞ்சம் பெற்றது நிரூபிக்கப்பட்டால் அலுவலக வாசலிலேயே தற்கொலை செய்யத் தயார். எனக்கு என் உயிர் முக்கியமில்லை. ஆனால் எனது குடும்பத்திற்கு எனது உயிர் முக்கியம்.

உயரதிகாரிகள் மீது பரபரப்பு புகார் :

வளைந்து செல்லாவிட்டால் ஒடுக்கப்படுவீர்கள் என்று ஆபாசமான விரல் சைகை காட்டி எஸ்பி மிரட்டுகிறார். நான் பேட்டி அளிப்பதால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்ட் செய்யப்படுவேன். இங்கு போலீசாருக்கும் பாதுகாப்பில்லை, காவல் துறைக்கும் பாதுகாப்பில்லை. நேர்மையாக இருப்பது ஒரு குற்றமா? கள்ளச்சாராய வழக்கில் 700 பேரைக் கைது செய்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டுள்ளேன்” இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

நேர்மையான, கண்டிப்பான டிஎஸ்பி சுந்தரேசன் :

கடந்த ஆண்டு நவம்பர் முதல் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக சுந்தரேசன் பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்றது முதல் கள்ளச்சாராயம் விற்பனை, மது கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். மாவட்டத்தில் அனுமதியே இல்லாமல் செயல்பட்டு வந்த 23 டாஸ்மாக் பார்களுக்குச் சீல் வைத்துள்ளார். மேலும், கள்ளச்சாராயம் மற்றும் மதுபானக் கடத்தல் தொடர்பாக 1200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன செய்யப் போகிறது திமுக அரசு? :

நேர்மையான அதிகாரியாக இருந்தும் தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று டிஎஸ்பி சுந்தரேசன்(DSP Sundaresan) அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், திமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

=========