Mekedatu dam project dinakaran condemns tn govt 
தமிழ்நாடு

மேகதாது அணை, திமுக அரசு ஆதரவா? : கேள்வி எழுப்பும் டிடிவி தினகரன்

காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும், கர்நாடக அரசின் முயற்சியை, தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன்கேட்டுக் கொண்டுள்ளார்.

Kannan

காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படைப் பணிகள் துவங்கி விட்டதாக, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். அப்படி நடந்தால், தமிழகம் பாலைவனமாவதை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும். டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முடங்கும்.

திமுக வீரவசனம் பேசுகிறது :

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எங்களின் அனுமதியின்றி, எந்த கொம்பனாலும், காவிரியின் குறுக்கே, அணை கட்ட முடியாது' என, திமுக அரசு வீர வசனம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது.

அதேசமயம், மறுபுறம் மேகதாது அணை கட்டுமானப் பணிகளுக்கான, நிலம் கணக்கீட்டுப் பணிகளை நிறைவு செய்து, அவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை, கர்நாடக அரசு தொடங்கி இருக்கிறது.

கர்நாடக அரசு பிடிவாதம் :

கடைமடை பாசன மாநிலங்களின் அனுமதியின்றி, எந்த ஒரு இடத்திலும், புதிய அணையை கட்ட முடியாது என உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தெளிவாக அறிவுறுத்தியது. அதன்பிறகும் சட்ட விரோதமாக, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என, கர்நாடக அரசு பிடிவாதம் பிடிப்பது, கடும் கண்டனத்துக்கு உரியது.

தமிழகத்திற்கு சட்டப்படி வழங்க வேண்டிய நீரை, கர்நாடகத்திடம் இருந்து கேட்டுப் பெற முடியாத திமுக, அரசு, இதற்கு மேலும் கூட்டணி தர்மத்திற்காக மவுனம் காத்தால், அது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இழைக்கும், மாபெரும் அநீதி ஆகும்.

திமுக மறைமுக ஆதரவா? :

கர்நாடகா முதல்வரின் பதவியேற்பு விழாவுக்கும், கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கும், பெங்களூருவுக்கு ஓடோடி செல்லும் முதல்வர், தமிழகத்திற்கு வரும் கர்நாடகா துணை முதல்வரை, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் முதல்வர், காவிரி விவகாரத்திற்காக எத்தனை முறை சந்தித்திருக்கிறார். இக்கேள்வி விவசாயிகள் ஒவ்வொருவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.

=====