Minister Nirmal Kumar made sensational allegation, deals worth upto ₹50 crore negotiated with MLAs to topple TVK govt google
தமிழ்நாடு

”TVK ஆட்சியை கவிழ்க்க MLAக்களுக்கு 50 கோடி வரை பேரம்”: திமுக சதி, துணைபோகும் EPS : அமைச்சர் நிர்மல்குமார் பகீர் தகவல்!

தவெக ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏக்களுக்கு 50 கோடி வரை பேரம் பேசப்படுவதாக, அமைச்சர் நிர்மல்குமார் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.

Kannan

தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக முயற்சிப்பதாக சில தினங்களாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

தவெக எம்எல்ஏ இளையராஜா

இந்தநிலையில், ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவை, சில தினங்களுக்கு முன்பு கைபேசியில் தொடர்பு கொண்ட சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், தான் 'Indian Political Democratic Strategies' என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

தவெக எம்எல்ஏவுக்கு நிர்பந்தம்

முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்களின் வேண்டுகோளின் பேரில் பேசுவதாகவும் கூறி நேரில் சந்திக்க அழைத்துள்ளார். ஆனால், அதை ஏற்க இளையராஜா மறுக்கவே, பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வரவுள்ளது.

ரூ.35 கோடி வரை பேரம்

அப்போது நீங்க ஆளுங்கட்சிக்குச் சாதகமாக நடந்து கொள்ள வேண்டும். அதற்குச் சன்மானமாக ரூ.35 கோடி வரை தரத் தயாராக இருக்கிறோம் என ஆசைவார்த்தை காட்டியுள்ளார்.

எம்எல்ஏவுக்கு மிரட்டல்

எம்எல்ஏ இளையராஜா மறுப்பு தெரிவித்தபோது, இதுகுறித்து வெளியே சொன்னால் நீங்களும் உங்க குடும்பத்தினரும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று திருநாவுக்கரசு மிரட்டல் விடுத்துள்ளார்.

போலீசாரிடம் புகார், விசாரணை

இதுபற்றி, சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் இளையராஜா புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசாரின் புலன் விசாரணையின் அடிப்படையில், இச்சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட திருநாவுக்கரசு (சென்னை), அவருக்குப் பின்னணியாகச் செயல்பட்ட நரேஷ் (திருச்சி) மற்றும் தியாகராஜன் (சென்னை மேடவாக்கம்) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 பேர் கைது - திமுகவுக்கு தொடர்பு

இந்த சதியின் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் இருப்பதாகக் காவல் துறையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

சதியில் செந்தில்பாலாஜி?

இதுபற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் நிர்மல்குமார், “ தவெக எம்எல்ஏக்களுக்கு ரூ.50 கோடி வரை பேரம் பேசப்படுகிறது. பேரம் பேசியவர்கள் செந்தில் பாலாஜி, அவரது சகோதரருக்கு நெருக்கமானவர்கள்.

எடப்பாடி துணை போகிறார்

எடப்பாடி பழனிச்சாமியும் இதற்கு துணை போகிறார். திமுக - அதிமுக இணைந்து ஆட்சியமைக்க தொடர் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இதற்கு கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

தமிழக அரசியலில் வீசும் புயல்

போலீசார் நடத்தப்போகும் விசாரணையின் அடிப்படையில் மேலும் சிலர் கைதாகலாம் எனத் தெரிகிறது. ஆட்சி கவிழ்ப்பு விவகாரம் தமிழக அரசியலில் புயலை கிளப்பி இருக்கிறது.

=================================