பெரியார் அறிவுலகம் - போலி புத்தகங்கள்
பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது சிந்தனை தளம் மூலமாக பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதலில் நடந்த முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
போலி பதிப்பகங்கள், போலி எழுத்தாளர்கள், வரலாற்றை மாற்றிக் காட்டும் அபத்தமான தகவல்கள் என, அனைவரையும் அவரது கட்டுரை அதிரச் செய்து இருக்கிறது.
முன்வைக்கப்படும் கேள்விகள்
பெரியார் அறிவுலகிற்குள் போலி புத்தங்கள் புக யார் காரணம், ஊழலுக்கு துணை போன அரசியல், அதிகாரிகள் பற்றி சரமாரியாக கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
யார் ஆட்சியில் நடந்தது என்ற கேள்விக்கு தவெக திமுகவையும், திமுக தவெகவையும் குற்றம்சாட்டி இருக்கின்றன.
நூல்கள் கொள்முதலில் ஊழல்
இந்தநிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்ர் ராஜ்மோகன், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
திருச்சி காமராஜர் அறிவுலகம் மற்றும் பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் திமுக அரசு மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார்.
திமுக மீது பகிரங்க குற்றச்சாட்டு
கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்காக புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக அவர் சாடினார்.
திமுகவிற்கு சவால்
"தெம்பு, திராணி இருந்தால் திமுக ஊதுகுழல்கள் இதை மறுக்க முடியுமா?" என அமைச்சர் ராஜ்மோகன் சவால் விடுத்தார்.
இந்தியாவின் முதல் AI ஊழல்
திருச்சி காமராஜர் அறிவுலகத்திற்கு AI புத்தகங்களை வாங்க திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே நடந்த முதல் ஏஐ ஊழல்.
அகல்விளக்கு பதிப்பகம்
அகல்விளக்கு பதிப்பகத்திற்கு புத்தக கொள்முதல் ஆணையை திமுக அரசு வழங்கியது. 7 நாட்களில் புத்தகங்களை வழங்க வேண்டும் என்பது. ஆனால் வந்ததோ குப்பையை விட மோசமான 40 பெட்டி புத்தகங்கள்.
மடைமாற்றம் செய்யும் திமுக
திறப்பு விழாவிற்காக புத்தகங்களை அடுக்கி வைக்கும் போது போடப்பட்ட சீல்களை, திமுகவினர் தற்போது மடைமாற்றம் செய்து பேசுகின்றனர்.
ஏஐ எழுதிய நூல்களுக்கு ரூ.50 கோடி
AI மூலம் எழுதப்பட்ட புத்தகங்களை தலா ரூ.50 கோடிக்கு பல்வேறு நூலகங்களுக்கு வாங்க கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
காமராஜர் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களுக்கு AI புத்தகங்களை வாங்க திமுக ஆட்சியில் ஆணை போடப்பட்டது எனவும் அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டி உள்ளார்.
சிறப்புக் குழு விசாரணை
திமுக ஆட்சியில் ஊழல் குறித்து சிறப்பு குழு அமைக்கப்படும். பெரியார் நூலகம் கட்டுமானத்திலேயே ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் இது தொடர்பாக ஆய்வு நடத்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகன் கேட்டுக் கொண்டார்.
ஊழல் கரையான்கள் அடித்து விரட்டப்படும்
நூல் கொள்முதல் தொடர்பான ஊழல் கரையான்கள் அடித்து விரட்டப்படும். மார்ச் 14ம் தேதி நூல் கொள்முதல் தொடர்பான பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது.
தவெக ஆட்சியில் புத்தகங்கள் வாங்கப்படவில்லை
தவெக ஆட்சியில் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை என்றும், கன்னிமாரா, கலைஞர் நூற்றாண்டு நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள், ஆசிரியர் யார் என்றே தெரியாதவர்கள் உள்ளிட்ட போலி பதிப்பகங்களை பயன்படுத்தி விஞ்ஞான ரீதியில் கொள்ளை அடித்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் அழுத்ததத்தால் நூல் கொள்முதல்
பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் தேர்வுக்கு குழுவில் 137 எழுத்தாளர்கள் இருந்ததாகவும் அதன் ஆலோசனைக் கூட்டத்தில் 112 பேர் கலந்துகொண்டதாகவும் கூறிய அமைச்சர், நூலகங்களுக்கு பரிந்துரைக்கப்படும் நூல்கள் குறித்து முதல் பக்கத்திலேயே அவர்கள் கையெழுத்து இட்டிருப்பதாக கூறினார்.
அனைவர் கண்ணிலும் மண்ணைத் தூவி ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இது போன்ற ஏஐ குப்பைகளை படித்தால் என்னாவது என்று அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பினார்.
இது போன்ற ஏஐ குப்பைகளை தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு திமுகவினர் வழங்குவார்களா என்று அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக பகிரங்க மன்னிப்பு கேட்கணும்
நூலகங்களில் போலி நூல்கள் கொள்முதல் செய்தது குறித்து மாணவர்களிடம் திமுக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த நூல் கொள்முதல் முறைகேடுகளை வெளியே கொண்டு வந்த எழுத்தாளர் பெருமாள் முருகனை பாராட்டுவதாகவும், கூறினார்.
கள்ள நோட்டு போல ஏஐ ஊழல்
கள்ள நோட்டு அடிப்பது போன்று ஏஐ பயன்படுத்தி நூலகத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் காட்டமாக தெரிவித்தார். .
இதுவரை விஞ்ஞான ஊழல்செய்துவிட்டு தப்பித்த திமுக இனி தப்பிக்க முடியாது என்றும் விசாரணையை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
=================