Tiruvannamalai Karthigai Deepam 2026 Arrangements Minister Ramesh Review
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான 80 சதவீத முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் நவம்பர் 21-க்குள் முடிக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஆய்வுக் கூட்டம் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த நிலவரம்
வரும் நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற உள்ள திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (18-11-2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
அமைச்சர் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பு
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் முன்னிலையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ் திருக்கார்த்திகை தீபத் திருவிழா குறித்து பல தகவல்களை தெரிவித்தார்.
நவம்பர் 21-க்குள் பணிகள் நிறைவு
அப்போது அவர், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து பல கட்டங்களாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது வரை 80 சதவீத முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 20 சதவீதப் பணிகளும் வரும் நவம்பர் 21-ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என்றார்.
இணையதள சர்வர் கோளாறு சரி செய்யப்பட்டது
மேலும் கடந்த ஆண்டில் பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கு ரூ.500, ரூ.600 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்த முறை முதல் முறையாக 3,000 நுழைவுச்சீட்டுகள் முற்றிலும் இலவசமாக ஆன்லைனில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணித்துளிகளில் அனைவரும் ஒரே நேரத்தில் முயற்சித்ததால் இணையதள சர்வர் முடங்கியது. தற்போது அது உடனடியாக சரி செய்யப்பட்டு பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர் என்றார்.
7,500 முதல் 8,000 நுழைவுச்சீட்டுகள் ஒதுக்கீடு விவரம்
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரமேஷ், இந்த ஆண்டு தீபத் திருவிழாவிற்கான நுழைவுச்சீட்டுகள் ஒதுக்கீடு குறித்தும் விளக்கமளித்தார்.
இந்த முறை மொத்தம் 7,500 முதல் 8,000 நுழைவுச்சீட்டுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 35 முதல் 40 சதவீத நுழைவுச்சீட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள நுழைவுச்சீட்டுகள் உபயதாரர்கள், நீதிபதிகள், அரசு அலுவலர்கள், விஐபிகள் எனப் பலதரப்பட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களும் நுழைவுச்சீட்டுகள் கேட்டு வருகின்றனர்.
உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை
எந்த முறையும் இல்லாத அளவிற்கு உள்ளூர் மக்கள் எவ்வித சிரமமும் இன்றி அண்ணாமலையார் கோயிலுக்குள் வந்து தரிசனம் செய்வதற்காகவே ஆன்லைன் இலவச நுழைவுச்சீட்டு நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் மருத்துவ முகாம்கள்
பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக எடுக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் ரமேஷ் தெளிவுபடுத்தினார்.
கோயிலுக்குள் பல்வேறு இடங்களில் பக்தர்கள் அமர்ந்திருந்தாலும், தீபமலை தரிசனம் காண இயலாத இடங்களை இந்த முறை கண்டறிந்து அங்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தீபமலை தரிசனம் தெளிவாகக் காணும் இடங்களில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் மலை ஏற தடை
திருவண்ணாமலைக்கு வருகை தரும் வெளியூர் பக்தர்கள் மட்டுமல்லாமல் உள்ளூர் பக்தர்கள், விஐபிகள் என அனைவரது பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே மலை ஏறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
500 மீட்டருக்கு ஒரு மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்குக் கோயிலுக்குள் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கிரிவலப் பாதையில் ஒவ்வொரு 500 மீட்டர் தொலைவிற்கும் மருத்துவ முகாம்கள், காவல் நிலையங்கள் மற்றும் 'May I Help You' உதவி மையங்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
============