Most of the TVK district secretaries support of accepting the BJP's proposal and joining the NDA alliance google
தமிழ்நாடு

கோட்டையை பிடிக்க ”2.5 ஆண்டு பார்முலா” : NDA கூட்டணிக்கு ஓகே சொன்ன மாவட்ட செயலாளர்கள் : விஜய் கையில் முடிவு!

பாஜக கூறும் யோசனையை ஏற்று என்டிஏ கூட்டணிக்கு செல்லலாம் என தாவெக மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து இருப்பதாக தெரிகிறது.

Kannan

தமிழக அரசியலில் புதிய பரிசோதனை

தமிழக அரசியல் களம் இதுவரை சந்தித்திராத ஒரு பரிசோதனையை சந்திக்க தயாராகி வருகிறது. டெல்லி மேலிடம் மேற்கொண்டுள்ள பார்ட்னர்ஷிப் ஆட்சி முறை என்ற புதிய அஸ்திரம், தவெகவை அசைத்து பார்த்து இருக்கிறது.

அதிரும் திராவிட கட்சிகள்

இரண்டரை ஆண்டுகள் முதல்வர் என்ற ஆஃபர் திராவிட கட்சிகள் அதிரவே வைத்து இருக்கிறது. அதிகாரத்தில் பங்கு தரவே மனமில்லாத திமுகவும், அதிமுகவும், பாஜகவின் ப்ளானை பயத்துடனே பார்க்கின்றன.

பாஜகவின் புதிய கணக்கு

அதிமுகவின் பலம், விஜயின் ஜென்ஸீ செல்வாக்கை ஒருங்கிணைத்தால் மாற்றம் நிச்சயம் என்பது பாஜகவின் கணக்கு.

இதற்கு விஜய் எதிர்பார்ப்பதை விட்டுக் கொடுக்க அதிமுக ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற நெருக்கடியை கொடுக்க தொடங்கி இருக்கிறது.

அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் விஜய் கூட்டணிக்கு வர வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி மட்டும் மவுனமாக இருந்து பாஜகவை எரிச்சலூட்டுகிறார்.

களத்தை உணர்ந்த விஜய்

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்பது ஒரு புதிய கட்சிக்கு எவரெஸ்ட் சிகரத்தை எட்டும் அளவுக்கு பெரும் சவால் தான். களப்பணி, தேர்தல் செலவுகள் மற்றும் நிர்வாக ரீதியான சிக்கல்களை கடந்து வெற்றி பெறுவது எளிதல்ல என்பதை விஜய் உணர்ந்து இருக்கிறார்.

அசுர பலத்துடன் திமுக கூட்டணி

26 கட்சிகளின் கூட்டணி, வலுவான அடித்தளம், செலவழிக்க பல ஆயிரம் கோடி என்ற அசுர பலத்துடன் களமாட இருக்கிறது திமுக.

இதை வீழ்த்துவது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. ஒருவேளை இந்த தேர்தலில் வீழ்ந்தால், தலையெடுப்பது என்பது கனவாகி விடும்.

2.5 ஆண்டுகள் முதல்வர் பதவி

பாஜகவின் முன்வைக்கும் திட்டத்தின்படி, தேர்தலில் வெற்றி பெற்றால் முதல் இரண்டரை ஆண்டுகள் ஒருவருக்கும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் இன்னொருவருக்கும் முதலமைச்சர் பதவியில் இருக்கலாம்.

இதன் மூலம் விஜய்க்கு அதிகாரம் எளிதாக கிடைக்கும். 5 ஆண்டுகளில் அதாவது 2031 தேர்தலுக்குள் தவெகவை தமிழகத்தில் வலுவாக காலூன்ற வைத்து விட முடியும்.

எடப்பாடிக்கு இக்கட்டான நிலை

ஆனால், இது எடப்பாடிக்கு பேராபத்தாக முடிய வாய்ப்பு இருக்கிறது. முதல் 2.5 ஆண்டுகள் எடப்பாடி முதல்வராக இருந்தால், அதன் பிறகு விஜய்க்கு அதிகாரம் மாறும்.

நிர்வாகத்திலும், கட்சிக்குள்ளும், கூட்டணியிலும் எடப்பாடியின் கை வலுவிழக்கும்.

விஜய் வருகையால், அதிமுக வாக்கு வங்கியில் ஏற்படும் சரிவையும் அவரால் தடுக்க முடியாது.

இது அதிமுகவுக்குள் எடப்பாடிக்கு இருக்கும் பிடியை வலுவிழக்க செய்து விடும்.

எனவே, இக்கட்டான சூழலில் சிக்கியுள்ள எடப்பாடி, பாஜக பார்முலாவை தவிர்க்கவே பார்க்கிறார்.

தவெக நிர்வாகிகள் ஆலோசனை

அதேசமயம் பாஜக முன்வைத்துள்ள பார்முலா விஜய் தரப்பை ஈர்த்து இருப்பதாக தெரிகிறது. எனவே தான் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? என்று மாவட்ட செயலாளர்களுடன் தவெக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர்.

என்டிஏ கூட்டணி - தவெகவில் ஆதரவு

பனையூரில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் 120 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

இவர்களில் 98 மாவட்டச் செயலாளர்கள் என்டிஏவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற கருத்தை கூறியதாக சொல்லப்படுகிறது.

டெல்லி செல்கிறார் விஜய்

கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக நாளை விஜய் டெல்லி செல்ல இருக்கும் நிலையில், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் தங்கி இருக்கும் போது பாஜக மூத்த தலைவர்களை விஜய் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

===