தமிழக பாஜகவின் அடையாளம் :
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர்களில் ஒருவர் இல. கணேசன். 1945ல் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்த இவர், அரசியல் ஈடுபாடு காரணமாக திருமணம் செய்து கொள்ளலாமல் தனது அண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
ஆர்எஸ்எஸ் தீவிர தொண்டர் :
சிறு வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது கொண்ட ஈடுபாட்டால், சமூக பணிகளில் தன்னை இணைத்து கொண்டு தீவிரமாக செயல்பட்டவர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் அமைப்பில் ஆற்றிய அரும்பணிகள், பின்னாளில் அவரை ராஜ்ய சபா எம்பி வரை உயர்த்தியது.
இளைஞராக இருந்தபோது, ஆர்எஸ்எஸ்.அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்த இல. கணேசன், எமர்ஜென்சி காலத்தில் போலீசாரிடமிருந்து தப்பித்து, சுமார் ஒரு வருட காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அந்த நாட்களில் தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனுடன் நட்புறவில் இருந்தார். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியுடன் நட்புறவில் இருந்தவர் இல. கணேசன்.
பாஜக உறுப்பினர் - ராஜ்யசபா எம்பி :
பாஜகவில் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவராக பொறுப்பு வகித்த இல. கணேசன், 1991ல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார். 2009, 2014 மக்களவைத் தேர்தல்களில், தென் சென்னை தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர், மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி, 2016 அக்டோபரில் பதவியேற்றார்.
மூன்று மாநிலங்களில் ஆளுநர் பொறுப்பு :
2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மணிப்பூர் ஆளுநராக பொறுப்பேற்ற இல. கணேசன், 2023 பிப்ரவரி வரை அப்பதவியில் பணியாற்றினார். அதனிடையே, 2022 ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை, மேற்கு வங்க மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வகித்தார். பின்னர், பிப்ரவரி 2023-ல் 19-வது நாகாலாந்து ஆளுனராக நியமிக்கப்பட்டு இறக்கும்வரை அப்பதவியில் இருந்தார்.
தலையில் அடிபட்டதால் பாதிப்பு :
சென்னை தியாகராய நகர் வீட்டில் கடந்த 7ம் தேதி, படியில் இருந்து விழுந்த இல. கணேசனுக்கு தலையில் அடிபட்டது. அதைத் தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 80.
தலைவர்கள் இரங்கல், அஞ்சலி :
சென்னை தியாயகராய நகர் வீட்டில் இல. கணேசன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள், முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தமிக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இல. கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழக பாஜகவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய இல. கணேசனின் மறைவு அந்தக் கட்சிக்கு பேரிழப்பாகும்.
======