நெல்லை அதிமுகவின் கோட்டை
நெல்லையில் அதிமுக வேட்பாளர் தச்சை என்.கணேசராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து, பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
“நெல்லை தொகுதியில் செய்ய வேண்டிய அனைத்தையும் நாம் செய்து முடித்து விட்டோம். அதனால் திமுக வேட்பாளர் இங்கு செய்வதற்கு எதுவுமே இல்லை.
விஜய் பற்றி கவலையில்லை
அதேபோல, விஜய் இங்கு வந்த போது அவருக்கு பெரும் கூட்டம் கூடியதாக பேசுகிறார்கள். நான் அதை பார்க்கவில்லை. பார்த்தால்தான் கருத்து தெரிவிக்க முடியும்.
விஜய்க்கு வரும் கூட்டம் பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஏனெனில், எம்ஜிஆர் காலத்தில் இருந்தே நெல்லை தொகுதி அதிமுகவின் இரும்புக் கோட்டை. இந்த தேர்தலிலும் அதை நிரூபிக்கும்.
திமுகவுக்கு சவால்
மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, தமிழகத்திற்கு ரூ.14 லட்சம் கோடி நிதி தந்துள்ளார். நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஆனால், காங்கிரஸ் கூட்டணியிலிருந்த திமுகவினர் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை. இதை மேடை போட்டு விவாதிக்க கூட தயார்.
மத்திய அரசை விமர்சிக்கலாமா?
தமிழகத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும்தான் அசுர வேகத்தில் 'டெவலப்' ஆகி வருகின்றன.
இதைத் தடுக்க துப்பில்லாத திமுக அரசு, மத்திய அரசு தரும் நிதி குறித்து மேடை பேச்சு மட்டுமே பேசுகிறது.
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வழங்கிய நிதியால் உருவான சாலைகள் மற்றும் பாலங்கள் தான் இங்கு உண்மையான வளர்ச்சி” என்றார்.
காங்கிரஸ் எங்கே இருக்கிறது?
காங்கிரஸ் குறித்து விஜய் பேசிய கருத்துக்கு, “தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. பேருக்காக கூட்டணியில் இருக்கின்றனர்.
ஒருவேளை காங்கிரஸ் விஜய்யுடன் இணைந்திருப்பதாக கூறினால், அதை அவரிடம் தான் கேட்க வேண்டும்”
திமுகவுக்கு அதிகாரிகள் உடந்தை
தேர்தல் பணிகளில் அரசு அதிகாரிகள் அப்பட்டமாக திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரும், காவல்துறை உயர் அதிகாரிகளும் திமுகவின் கைப்பாவையாக மாறியுள்ளனர்.
வருவாய்த்துறையும், காவல்துறையும் கைகோர்த்துக் கொண்டு மீண்டும் திமுகவை ஆட்சிக்கு கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். ஆனால், மக்களின் ஆதரவு அவர்களுக்கு இல்லை; இந்த கனவு ஒருபோதும் பலிக்காது” என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
=============