’டெல்டாக்காரன்’ பெருமை பேசும் முதல்வர்
பெரம்பலுார் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் பாஜக சார்பில், மக்கள் சந்திப்பு மற்றும் கிராமசபைக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ முதல்வர் ஸ்டாலின், தன்னை டெல்டாக்காரன் என்று பெருமை பேசிக் கொள்கிறார். கடந்த ஜூன் மாதமே குறுவை சாகுபடி தொடங்கி விட்டது. மொத்தம் 6.30 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
நெல் கொள்முதல் அக்கறையில்லை
இந்த தகவல் முதல்வருக்கு நன்கு தெரியும். ஆனாலும், நெல் கொள்முதலை பிரச்னையின்றி செய்ய, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிடவில்லை. நெல் அறுவடையானதும், அதை கொள்முதல் செய்யாததால், மழையில் நனைந்து விளைவிக்கப்பட்ட அனைத்தும் வீணாகி விட்டன. இதன் காரணமாக விவசாயிகள் கண்ணீரில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.
கிடங்கு இல்லை என்பது பதிலா?
கேட்டால், வாங்கும் நெல்லை கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்க, போதுமான கிடங்கு இல்லை என்கிறார்கள். இதெல்லாவற்றையும் கடந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டால், மூட்டைக்கு 42 ரூபாய் கமிஷனாகப் பெறப்படுகிறது.
டாஸ்மாக்கில் மட்டுமே அக்கறை
டாஸ்மாக் மீதும் அதன் விற்பனை மீதும் இருக்கும் அக்கறை, விவசாயிகள் மீது திமுக அரசுக்கு இல்லை. இதற்கான முழு பொறுப்பும் திமுக அரசையே சேரும். பயிர் பாதித்த இடங்களுக்கு அதிகாரிகள் யாரும் இன்றுவரை சென்று பார்வையிடவில்லை.
பெயரளவில் பார்வையிட்ட உதயநிதி
பெயருக்கு அங்கு சென்ற துணை முதல்வர், பாதிப்பை பார்க்கவில்லை; வந்ததாக கணக்குக்காட்ட படம் மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பி விட்டார். கொள்முதல் செய்யாத நெல் பாதிப்புக்குள்ளான விஷயத்தில், அமைச்சர்கள் சாக்கு போக்கு சொல்கிறேன் என்று, மாறி மாறி பேசி வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் விஜய்?
கரூர் உயிரிழப்பு விவகாரத்தில் நடிகர் விஜய் மீது குற்றம் சொல்ல முடியாது. பாஜக - அதிமுக கூட்டணியில் விஜய் இணைவாரா என்பது குறித்து, இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. தேர்தலின் போது எப்படி வேண்டுமானாலும் கூட்டணி அமையலாம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், அனைவரும் ஒன்றிணைவது அவசியமாகிறது” இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
================