Nayinar Nagendran strongly condemned, incident in which a 7 year old girl was sexually assaulted in Karur 
தமிழ்நாடு

”போதையில் இளைஞர்கள், பலியாகும் பெண்கள்” : திமுக அரசுக்கு கண்டனம்

Nainar Nagendran Condemns DMK on Karur Child Abuse : கரூரில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Kannan

சிறுமிக்கு கொடூரம் - பதைபதைக்கிறது

Nainar Nagendran Condemns DMK on Karur Child Abuse : இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,” கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூரில் அதீத மதுபோதையில் இளைஞர் ஒருவர், விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன.

ஜீரணிக்கவே முடியவில்லை

அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி ஒரு தகப்பனாக இச்சம்பவத்தை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. பாதிக்கப்பட்ட அக்குழந்தை முழு மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் மீண்டு வர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உயர்வு

இந்த அரசின் கீழ் போதையின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைக் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அவையனைத்திற்கும் பின்னணியில் போதையின் கரங்கள் தான் ஓங்கியிருக்கின்றன.

“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” வெற்றுப் பதாகை

ஆனால், “போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என வீர வசனம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரும்புக்கரமோ இத்துப் போய்விட்டது. எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத ஒரு அவல ஆட்சியை நடத்திக் கொண்டு “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற விளம்பரப் பதாகைகளைத் தூக்கிப் பிடிக்க திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்.

திமுக அரசு தண்டிக்கப்பட வேண்டும்

மழலை மாறாத குழந்தையைச் சீரழித்த அக்கொடும் குற்றவாளியும், கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பெண்களின் பாதுகாப்பை அடகு வைத்து ஆட்சி நடத்தும் திமுக அரசும் தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்” இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

======