அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல்துறை
New body Worn cameras project in Tamil Nadu Traffic Police : போக்குவரத்து போலீஸாரின் நடவடிக்கை, வாகன ஓட்டிகளின் செயல்பாடுகளை துல்லியமாக அறிந்து கொள்ள வசதியாக, வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீஸாருக்கு நவீன ‘பாடி வோன் கேமரா’ (Body worn camera) விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது.
விதிமீறல்களுக்கு அபராதம்
போதையில் வாகனம் ஓட்டுவோர், அதிவேகமாக வாகனங்களை இயக்குவோர், வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள், ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் தடையை மீறி செல்வோர், ஒரே இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் செல்வோர், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோர், சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டிச் செல்வது உட்பட பல்வேறு வகையான போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்கின்றனர்.
போக்குவரத்து காவல்துறையினருக்கு பாடி வோன் கேமரா
இந்த அபராதங்களை நேரடியாக களத்தில் நின்றும், ஆங்காங்கே உள்ள கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணித்தும் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்கின்றனர்.
தற்போது, ‘ஏஐ’ தொழில் நுட்பத்துடனும் அதிக திறன் கொண்ட கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலமும் விதிமீறல் வாகன ஓட்டிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
நவீன கேமரா வசதி
இந்த கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத சாலைகளில் விதிகளை மீறுவோருக்கு அபராதம் வசூலிக்கும்போது சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பல நேரங்களில் தகராறு ஏற்படுகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறைக்கு ‘பாடி வோன் கேமரா’வழங்கப்பட்டது.
காவல்துறைக்கு பாடி வோன் கேமரா
இந்த கேமராக்களை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீஸார் தங்களது சீருடையில் நெஞ்சு பகுதியில் உள்ள சட்டை பட்டனில் மாட்டி வைத்துக் கொள்வார்கள். இதன் மூலம் போக்குவரத்து போலீஸார் மற்றும் வாகன ஓட்டிகளின் உரையாடல்கள் அந்த பாடி ஒன் கேமராவில் தெளிவாக பதிவாகி விடும். யார் மீது தவறு உள்ளது என்றும் தெரிந்து விடும்.
ஆனால், இந்த கேமரா பயன்பாட்டில் இருக்கும் போது அதிகமாக சூடாவதாகவும், போதுமான நேரம் சார்ஜ் நிற்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதை போக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட ‘பாடி வோன் கேமரா’ சென்னை போக்குவரத்து காவலில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
தற்போது தினமும் 5 போக்குவரத்து உதவி ஆய்வாளர்களுக்கு தலா ஒன்று வீதம் வழங்கப்பட்டு சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது.
வாகன சோதனையில் ஈடுபடும் போது வழங்கப்படும்
இதில் பதிவாகும் நிகழ்வுகளை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்க முடியும். மேலும்,2 நாட்கள் முழுமையாக சார்ஜ் நிற்கும்.
இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக போக்குவரத்து காவல்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் வாகன சோதனையில் ஈடுபடும் அனைத்து போக்குவரத்து காவல்துறையினருக்கும் விரைவில் வழங்கப்பட உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
=============