’டிட்வா’ புயல்
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல், இலங்கையில் பலத்த மழையை பெய்வித்தது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தை நோக்கி நகர்ந்த புயல், தென மாவட்டங்களில் கன மழையை கொடுத்தது. வட தமிழக கடற்கரையை ஒட்டி நகர்ந்து ஆந்திராவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
ஆனால், வலுவிழந்த டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் நகர்ந்து செல்வதால், நேற்றிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரலாக மழை பெய்து வருகிறது.
திருவள்ளூரில் கனமழை
தமிழக கடற்கரையை ஒட்டி செல்லும் தாழ்வு மண்டலம், ஆந்திராவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக,
தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிதமான மழை தொடரும். திருவள்ளூர் மாவட்டத்தில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
6ம் தேதி வரை மழை தொடரும்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 6ம் தேதி வரை, சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் ஆபத்து நீங்கியதால், வட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சூறைக்காற்று - மீனவர்களுக்கு எச்சரிக்கை
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
1.38 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
'டிட்வா' புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில், 1.38 லட்சம் ஏக்கரில், நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 149 கால்நடைகள் இறந்துள்ளன. கடலோர மாவட்டங்களில், 234 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
காற்று முறிவால் பாதிப்பு
புயல் வலுவிழக்க காரணம் குறித்து கூறிய தனியார் வானிலை ஆய்வாளர்கள், “இலங்கையின் நிலபரப்பில் இருந்து கடற்பரப்புக்கு வந்தது முதல், 'டிட்வா' புயலின் நகர்வு மற்றும் சுழற்சி வேகம் குறைந்தது. வங்கக்கடலின் மேல், வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்று முறிவு மற்றும் வறண்ட காற்று ஊடுருவலால், 'டிட்வா' புயல் பாதிக்கப்பட்டது. இதனால், அதில் எதிர்பார்த்த அளவுக்கு மழை மேகங்கள் உருவாகவில்லை.
சென்னை மற்றும் தமிழக வடமாவட்ட கடலோர பகுதிகளை நெருங்கி இணையாக நகரும் போது, மேற்கில் இருந்து வரும் காற்றின் தாக்கத்தால், புதிதாக மழை மேகங்கள் உருவானால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தனர்.
====
!