no release of Cauvery water, water bodies in Delta districts drying up, water for livestock become uncertain. AI generated
தமிழ்நாடு

”டெல்டாவில் வறண்டு வரும் நீர்நிலைகள்” : அடிமட்டத்தில் தண்ணீர், குடிநீர் தட்டுப்பாடு : கால்நடைகளுக்கும் பாதிப்பு...!

காவிரி நீர் திறக்கப்படாததால், டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள் வேகமாக வறண்டு வருவதால், கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதே கேள்விகுறியாகி இருக்கிறது.

Kannan

தண்ணீர் திறக்காத கர்நாடகம்

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால், அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்படவில்லை.

இதனால், வழக்கமாக ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை மூடியே கிடக்கிறது. எனவே, தமிழக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி நிற்கிறது.

தீவிரம் பெறும் தண்ணீர் பிரச்னை

காவிரி வறண்டு கிடப்பதால், நெற்களஞ்சியமாக போற்றப்படும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பற்றாக்குறை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

காவிரி நீர் வரத்து தாமதம், பருவமழை பொய்த்ததால் அதிகரிக்கும் நெருக்கடி. குறையும் நிலத்தடி நீர்மட்டம் ஆகியவற்றால் டெல்டா விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.

வறண்டு போகும் ஏரிகள், குளங்கள்

டெல்டா முழுவதும் ஏரிகள், குளங்கள் மற்றும் கிளை ஆறுகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கடும் கவலையில் உள்ளனர்.

தமிழகத்தின் வேளாண் மண்டலம்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களின் ஒரு பகுதியை உள்ளடக்கிய காவிரி டெல்டா, தமிழகத்தின் முக்கிய வேளாண் மண்டலமாக திகழ்கிறது.

முடங்கி போன விவசாயம்

சுமார் 12.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காவிரி பாசனத்தை மட்டுமே நம்பி உள்ளன. குறுவை, சம்பா, தாளடி என ஆண்டுக்கு மூன்று பருவங்களில் நெல் சாகுபடி நடைபெறும் நிலையில், கரும்பு, வாழை, வெற்றிலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் இப்பகுதியில் விளைவிக்கப்படுகின்றன.

சம்பா, தாளடியும் பாதிப்பு

காவிரி நீர் கிடைக்காததால், குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்ததோடு, அதன் தாக்கம் சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளையும் பாதிக்கும் எனத் தெரிகிறது.

361 ஏரிகள் வறண்டன

டெல்டா மாவட்டங்களில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 737 ஏரி, குளங்கள் உள்ளன. இதில் 361 ஏரி, குளங்கள் முழுமையாக வறண்டு விட்டன.

25% மட்டுமே தண்ணீர் உள்ளது

350 நீர்நிலைகளில் 25 சதவீதத்திற்கும் குறைவான நீரே உள்ளது. வெறும் 23 நீர்நிலைகளில் மட்டுமே 25 சதவீதத்திற்கும் அதிகமான நீர் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

6ல் ஒரு பங்கு நீர்

டெல்டா மாவட்டங்களின் பொதுப்பணித்துறை நீர்நிலைகளில் மொத்தம் 6,687.7 மில்லியன் கனஅடி நீரை சேமிக்கும் வசதி உள்ளது. ஆனால் தற்போது வெறும் 1,097 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருப்பில் உள்ளது.

அதாவது மொத்த கொள்ளளவில் சுமார் 16 சதவீதம், 6-ல் ஒரு பங்குக்கும் குறைவான அளவிலேயே நீர் இருப்பது கவலைக்குரிய நிலையை வெளிப்படுத்துகிறது.

குடிநீருக்கும் தட்டுப்பாடு

ஏரிகள் மற்றும் குளங்கள் வறண்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. பல பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் அளவு குறைந்துள்ளதால், எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

கால்நடைகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை

கால்நடைகளுக்கான குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஏரிகள் மற்றும் குளங்களை ஆழப்படுத்தி, கால்வாய்களை தூர்வாரி, மழைநீர் சேகரிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தால், வறட்சி காலங்களை சமாளிக்க முடியும் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

========