தமிழக சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. ஒரே கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதனால், தமிழகம் முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்து இருக்கிறது.
வேட்புமனு தாக்கல் தொடக்கம்
தேர்தல் ஆணைய அனுமதியின் பேரில் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை போட்டியிட விரும்புவோர் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம்.
ஏப் 6 மனுத்தாக்கல் நிறைவு
ஏப்ரல் 6ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுகிறது. 8 நாட்கள் மொத்தம் அவகாசம் இருந்தாலும் இடையில் 4 நாட்கள் விடுமுறை தினம் வருகின்றன. மொத்தமே 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.
நான்கு நாட்கள் விடுமுறை
மார்ச் 31ம் தேதியான நாளை மகாவீர் ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறையாகும். ஏப்ரல் 1 ஆம் தேதி வங்கி முழு வருட கணக்கு முடிவு, ஏப்ரல் 3 ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழை என மொத்தம் 4 நாட்கள் விடுமுறையில் சென்று விடுகிறது.
மனுத் தாக்கலுக்கு 4 நாட்கள் மட்டுமே
எனவே, தேர்தல் போட்டியிட விரும்புவோர் இன்று ( திங்கட்கிழமை ), ஏப்ரல் 2, 4, 6 ஆகிய நான்கு நாட்களில் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய முடியும். எனவே, போட்டியிட விரும்புவோர் இந்த நாட்களில் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இயலும்.
இரண்டு வழிகளில் மனுத்தாக்கல்
அந்தந்த தொகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை நேரில் சமர்பிக்கலாம். அல்லது தேர்தல் ஆணையத்தின் சுவிதா இணையதளம் வாயிலாகவும் மனுத்தாக்கல் செய்யலாம்.
மனுத்தாக்கல் - வழிகாட்டு நெறிமுறைகள்
* அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளருக்கு ஒருவரும், பிற வேட்பாளர்களுக்கு 10 பேரும் வேட்பு மனுவை முன்மொழிய வேண்டும்.
*முன்மொழியும் நபர்கள் அந்த தொகுதியில் வாக்காளர்களாக இருக்க வேண்டும்.
* வேட்பாளர் எந்த தொகுதியை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
* 5 பேர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வர வேண்டும்.
* தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
* தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி மாலை 3 மணியோடு, வேட்புமனு தாக்கல் நிறைவடையும்
* ஏப்ரல் 7ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுடைய மனுக்கள் ஏற்கப்படும்.
* ஏப்ரல் 9ம் தேதி மாலை வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். அதன்பிறகு, சின்னங்கள் ஒதுக்கப்படும்.
* ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.
* தமிழகத்தில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
* மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற உள்ளனர்.
* 5 மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படும்.
=======