Northeast Monsoon Preparedness: CM Vijay Directs Collectors to Focus on Hilly Regions Google
தமிழ்நாடு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் : மலைப் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த ஆட்சியர்களுக்கு CM விஜய் உத்தரவு..

நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மலை மாவட்டங்களில் சிறப்புக் கண்காணிப்பு மேற்கொள்ள உத்தரவு !!!

NARENDRAN K

பருவமழையை எதிர்கொள்ள ஆய்வுக் கூட்டம் :

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தெற்கு உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, நீலகிரி, சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.

மலைப் பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பு :

கனமழையால் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட மலைப் பகுதிகளில் நிலச்சரிவு, மண் சரிவு, பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிப்பு போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என்பதால், அந்த பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்துமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.

நிவாரண முகாம்கள் மற்றும் மீட்பு வசதிகள் தயார் :

அபாயம் உள்ள பகுதிகளுக்கு அருகிலுள்ள நிவாரண முகாம்கள் உடனடியாக பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்யவும்.

மலைப்பகுதிகளில் தொலைத்தொடர்பு பாதிக்கப்படும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விஹெச்எஃப் கருவிகள் மற்றும் செயற்கைக்கோள் தொலைபேசிகள் செயல்படும் நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அவசர கால வெளியேற்ற ஒத்திகைகள் மற்றும் மீட்பு பயிற்சிகளையும் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலச்சரிவு அபாயத்தின் அடிப்படையில் நடவடிக்கை :

1973-ஆம் ஆண்டு முதல் பதிவான தரவுகளின்படி, நீலகிரி மாவட்டத்தில் 490, திண்டுக்கல் மாவட்டத்தில் 257, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 238 மற்றும் தேனி மாவட்டத்தில் 91 நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும், நீலகிரியில் 79 மற்றும் திண்டுக்கல்லில் 24 உயர் மற்றும் மிக உயர் அபாய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனால் மலைப்பகுதிகளுக்கான தனிப்பட்ட பேரிடர் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ள அபாயப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை :

தென் மாவட்டங்களில் கால்வாய்கள், நீர்வழிகள், கண்மாய்கள் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்புகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்யவும், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அபாயப் பகுதிக்கும் பொறுப்பான அலுவலர்களை நியமித்து அவசரகால செயல்திட்டங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

=================