Childrens Day Cake Distribution TN Govt School Students source:ai generated
தமிழ்நாடு

நவ.14 : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க முதல்வர் விஜய் திட்டம்; 61.84 லட்சம் கேக்குகள் கொள்முதல் செய்ய டெண்டர்!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய சத்துணவுடன் இனிப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Kavitha prasanna

Childrens Day Cake Distribution TN Govt School Students

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 61.84 லட்சம் கேக்குகள் வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம்

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய சத்துணவுடன் இனிப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) மூலம் மொத்தம் 61,84,566 'ஸ்பாஞ்ச் கேக்' துண்டுகளைக் கொள்முதல் செய்ய குறுகிய கால ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

கேக்கின் அளவு மற்றும் சுவைகள்

ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகள்

அளவு மற்றும் பேக்கிங்

மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு கேக்கும் 45 கிராம் எடை கொண்டதாக இருக்க வேண்டும். மேலும், அவை தனித்தனி உறைக்குள் பேக் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

4 வகை சுவைகள்

ஒரே சுவையாக இல்லாமல் மிக்ஸ்டு புரூட், கிளாசிக் வெனிலா, ரிச் சாக்லேட் மற்றும் பட்டர்/மில்க் ஆகிய 4 சுவைகளில் கேக்குகள் வழங்கப்பட வேண்டும்.

தரம் மற்றும் பாதுகாப்பு

கேக்குகள் தரமானதாகவும், மென்மையாகவும், பஞ்சு போலவும் இருக்க வேண்டும். பூஞ்சை, கெட்டுப்போன துர்நாற்றம், செயற்கை ரசாயன சுவை ஆகியவை இருக்கக்கூடாது. டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கக் கூடாது.

கடுமையான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள்

கேக்குகளின் தரம் மற்றும் விநியோகம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கெடாமல் இருக்கும் காலம்

பள்ளிகளில் நவம்பர் 14-ஆம் தேதியன்று கேக்குகள் விநியோகிக்கப்படும் போது, அவை குறைந்தபட்சம் மேலும் 30 நாட்கள் கெடாமல் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

லோகோ மற்றும் விவரங்கள்

ஈர்ப்பதம் புகாத தரமான உரைகளில் கேக் பேக் செய்யப்பட வேண்டும். அந்த உறையின் மீது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உணவுப் பாதுகாப்புத் துறை முத்திரை மற்றும் தமிழக அரசின் லோகோ ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும்.

தரச்சான்றிதழ்

ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கும் நிறுவனங்கள் NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் பெறப்பட்ட தரச்சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், ஆய்வுக்குழுவிடம் ஒவ்வொரு சுவையிலும் சாம்பிள் கேக்குகளை வழங்கி ஒப்புதல் பெறுவது கட்டாயமாகும்.

விநியோகப் பொறுப்பு

ஒப்பந்தம் பெறும் நிறுவனமே போக்குவரத்து செலவுகளை ஏற்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளுக்கு நேரடியாக கேக்குகளைப் பாதுகாப்பாக விநியோகிக்க வேண்டும்.

==============