முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
OPS Delhi Visit To Meet Amit Shah : 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் ஓ.பன்னீர் செல்வம், பின்னர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வரும் அவர், மீண்டும் தாய்க்கழகத்தில் இணைய மேற்கொண்ட எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.
கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் தோல்வியை தழுவினார். அதன்பிறகும் அதிமுகவில் சேர அவர் தொடர்ந்து முயற்சித்து வந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அடைத்த கதவை திறக்க முடியாது என்பதில் உறுதியாக நிற்கிறார்.
என்டிஏ கூட்டணியில் தினகரன்
ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்ட, அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் அதிமுக-பாஜ கூட்டணியில் இணைந்து விட்டார். எடப்பாடியுடன் ஒரே மேடையில் ஏறிய அவர், பங்காளி சண்டை முடிவுக்கு வந்து விட்டதாக கூறி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
தனித்து விடப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்
ஓபிஎஸ்சை அதிமுகவிலும், கூட்டணியிலும் சேர்க்க மாட்டேன் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக இருந்தால், எந்த முடிவும் எடுக்க முடியாமல் ஓபிஎஸ் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
திமுக கூட்டணியில் அவருக்கு வரவேற்பு இருந்தாலும், அதிமுகவை எதிர்க்க வேண்டி இருக்குமே என்பதால், ஓ. பன்னீர்செல்வம் தயங்குகிறார். விஜயின் தவெகவுக்கு சென்றாலும், சீனியர் என்ற முறையில் அவருக்கு எத்தகைய பொறுப்பு கிடைக்கும் என்பது கேள்விக்குறிதான்.
வேறு கட்சிகளுக்கு சென்ற ஆதரவாளர்கள்
இதனால் ஓ.பன்னீர்செல்வத்துடன் இருந்த நிர்வாகிகள் பலர் மாற்று கட்சிகளுக்கு சென்று விட்டனர். மற்றவர்களும் மாற்று கட்சிகளுக்கு தாவ தயாராகி வருகின்றனர். ஓபிஎஸ் திமுக அணிக்கு செல்லப்போகிறார், தவெக பக்கம் சாயப்போகிறார் என்றெல்லாம் யூகங்கள் கிளம்பின.
அமித் ஷாவை சந்திக்கும் ஓ. பன்னீர்செல்வம்
இந்நிலையில் ஓபிஎஸ் விவகாரத்தில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க, ஓ. பன்னீர்செல்வம் தேதி கேட்டுள்ளாராம். இரண்டு நாளில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
என்டிஏ மேடையில் ஓ. பன்னீர்செல்வம்
அதன்படி, அதிமுகவில் நேரடியாக இணைய முடியா விட்டாலும், ஓ. பன்னீர்செல்வம் பாஜக அணியில் இணைய முடிவு செய்துள்ளாராம். இது சுமூகமாக நடந்தால், மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரும் போது அவருடன் மேடையில் ஓபிஎஸ்சும் ஏறுவார் என்று தெரிகிறது.
டிடிவி, அன்புமணி - ராஜ்ய சபா சீட்
அதிமுக கூட்டணியில் அன்புமணி, தினகரனுக்கு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அன்புமணிக்கு அதிமுக சார்பிலும், தினகரனுக்கு பாஜக சார்பில் ஏதாவது வட மாநிலம் ஒன்றில் இருந்து இந்த வாய்ப்பு வழங்கப்படும். எனவே, சட்டமன்ற தேர்தலில் இரண்டு பேரும் போட்டியிட மாட்டார்கள்.
ஓபிஎஸ் போட்டியில்லை
பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் 6 தொகுதிகளை எதிர்பார்க்கிறாராம். தேர்தலில் போட்டியிடாமல், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய முடிவு செய்துள்ளாராம். அவரது மகன் ரவீந்திரநாத், பெரியகுளம் தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.
பாஜக ஒதுக்கப் போதும் தொகுதிகள்
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இருந்து தினகரன், ஓபிஎஸ், ஜி.கே. வாசன், கிருஷ்ணசாமி, பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோருக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும்.
130 தொகுதிகளில் அதிமுக...
அதிமுக சார்பில் அன்புமணியின் பாமகவுக்கு தொகுதிகள் தரப்படும். 130 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட அதிமுக திட்டமிட்டு இருக்கிறதாம். இப்படி தொகுதிகள் ஒதுக்கப்படும் போது, தேவையற்ற பிரச்னைகள் வராது என்று அதிமுகவும், பாஜகவும் கருதுகின்றன.
இறுதி செய்யப்படும் அதிமுக கூட்டணி
மார்ச் ஒன்றுக்குள் கூட்டணியை இறுதி செய்து விட்டு, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, சூறாவளி சுற்றுப் பயணம், தீவிர பிரசாரத்தில் ஈடுபட அதிமுக கூட்டணி முடிவு செய்து இருக்கிறது.
=============