O. Panneerselvam supporter, former minister Vellamandi Natarajan, who deeply dissatisfied on him, rejoined in ADMK google
தமிழ்நாடு

மீண்டும் அதிமுக, எடப்பாடி பக்கம் சாய்ந்தார் வெல்லமண்டி நடராஜன் : OPS மீது காட்டமான விமர்சனம்

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தால், கடும் அதிருப்தி அடைந்த அவரது ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.

Kannan

முடிவுக்கு வந்த உட்கட்சி மோதல்

அதிமுகவில் உட்கட்சி மோதல் ஒருவழியாக முடிவுக்கு வந்து விட்டது. தனிக்கட்சி தொடங்கி எடப்பாடியை கடுமையாக எதிர்த்து வந்த டிடிவி. தினகரன், அதிமுக கூட்டணியில் இடம்பெற்று மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

திமுகவில் ஓபிஎஸ்

கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு, பின்னர் அதிமுகவுக்குள் வர கடும் முயற்சி மேற்கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடைசி வரை போராடி தோல்வியை தழுவினார். இதனால், வேறு வழியின்றி அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தனிக்கட்சி தொடங்கிய சசிகலா

அதிமுகவில் மீண்டும் வர வேண்டும் என்று எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்ட சசிகலா, சில தினங்களுக்கு முன்பு தனிக்கட்சி தொடங்கி விட்டார். அவராலும் எடப்பாடியை மீறி எதையும் செய்ய முடியவில்லை என்பது தான் உண்மை.

அதிமுவுக்கு திரும்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள

இதன்மூலம், அதிமுகவில் தனது உறுதிப்பாட்டை நிலை நிறுத்தி விட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்தநிலையில், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தவர்களும் அவரது திமுகவில் இணைந்ததால் விரக்தி அடைந்து, மீண்டும் அதிமுகவுக்கே திரும்ப முடிவு செய்து இருக்கிறார்கள்.

அதிமுகவில் வெல்லமண்டி நடராஜன்

ஓபிஎஸ் அணியில் இருந்த வெல்லமண்டி நடராஜன் அதிமுகவில் மீண்டும் ஐக்கியமாகியுள்ளார். அவரும் ஓபிஎஸ் வழியில் திமுகவுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

1972ம் ஆண்டு முதல் அதிமுகவில் பணியாற்றி வரும் இவர், திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவராகவும் இருந்துள்ளார். 2022ல் அதிமுக உட்கட்சி மோதலில் ஓபிஎஸ் பக்கம் நின்றதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, வெல்லமண்டி நடராஜன், மீண்டும் அதிமுகவிற்கே திரும்பியுள்ளார்.

ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியும், அதிமுகவில் இணைந்தார்.

திமுகவிற்கு செல்ல மனமில்லை

திமுகவில் செல்ல மனம் இடம் தரவில்லை என்று கூறிய வெல்லமண்டி நடராஜன், அதிமுகவிற்கு திரும்பியதாக தெரிவித்து இருக்கிறார். ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட தன்னால் திமுகவில் பயணிக்க முடியாது என்று கூறினார்.

ஓபிஎஸ் மீது காட்டம்

அமைதியாக இருப்பது போல காட்டிக் கொண்டு, தனக்கு தேவையானதை சாதித்து கொள்பவர் ஓபிஎஸ் என்று விமர்சித்த அவர், அவரது முடிவு கட்சிக்கு விரோதமானது என்றார். ஓபிஎஸ் என்னையும் திமுகவிற்கு அழைத்தார், போக மனம் இடம் தரவில்லை என்று வெல்லமண்டி நடராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

=====