October 11 Mega Event: Modi, Vijay to Travel from Poonamallee to Porur by Metro? Google
தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயிலில் மோடி-விஜய் பயணம், சந்திப்பு : அக்டோபர் 11, எகிறும் எதிர்பார்ப்பு..!

அக்டோபர் 11-ல் மெட்ரோ சேவை தொடக்கம்; போரூர் வரை பிரதமர் மோடி, முதல்வர் விஜய் இணைந்து பயணிக்கலாம் என தகவல் ...

NARENDRAN K

சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முக்கிய பகுதியாக இருக்கும் பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை வருகிற அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் முக்கிய வழித்தடம் :

சென்னையில் தற்போது சென்ட்ரல் - பரங்கிமலை மற்றும் விம்கோ நகர் - விமான நிலையம் ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான 4-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக பூந்தமல்லி - வடபழனி இடையேயான 14.64 கிலோமீட்டர் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டும் தாமதம் :

இந்த வழித்தடத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதமே நிறைவடைந்தன.

தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு, கடந்த மே மாதத்தில் பயணிகள் சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்பு சான்றிதழையும் வழங்கினார்.

எனினும், சேவை தொடக்கம் தாமதமாகி வந்த நிலையில், தற்போது அக்டோபர் 11-ஆம் தேதி திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மோடி - விஜய் ஒரே ரயிலில் பயணம்?

திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர் மற்றும் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிறகு, பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடியும், முதல்வர் விஜயும் இணைந்து பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஐடி வளாகத்தில் அடுத்த நிகழ்ச்சி :

மெட்ரோ திறப்பு விழாவைத் தொடர்ந்து சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வேலூர் விமான நிலையம், தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியிலும் முதல்வர் விஜய், ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

முதல் கட்டத்தில் 10 நிமிட இடைவெளியில் சேவை :

பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் ஆரம்ப கட்டமாக 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், வடபழனி - போரூர் இடையே அமைக்கப்பட்டுள்ள சாலிகிராமம் மற்றும் ஆலப்பாக்கம் மெட்ரோ நிலையங்களின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், அந்த நிலையங்களில் ரயில்கள் தற்காலிகமாக நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டர்கள், ரசிகர்கள் திரள வாய்ப்பு :

பிரதமர் மோடியும் முதல்வர் விஜயும் ஒரே நிகழ்வில் பங்கேற்று, மெட்ரோ ரயிலில் இணைந்து பயணம் மேற்கொண்டால், பூந்தமல்லி, போரூர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க மற்றும் த.வெ.க தொண்டர்கள், ரசிகர்கள் அதிக அளவில் திரள வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

===================